திடீரென பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழை: மாரத்தான் வீரர்கள் பலர் சுருண்டு விழுந்து பலி
சீனாவின் கன்சூ மாகாணத்தில் பலத்த காற்றுடன் திடீரென்று ஆலங்கட்டி மழி பெய்ததால் மாரத்தான் வீரர்கள் 21 பேர் சுருண்டு விழுந்து பலியாகியுள்ளனர்.
கன்சூ மாகாணம், பேயின் நகர் அருகே அமைந்துள்ள சுற்றுலா தலத்தில் 62 மைல்கள் தொலைவுக்கான மாரத்தான் போட்டிகள் சனிக்கிழமை முன்னெடுக்கப்பட்டது.
இந்த நிலையில் திடீரென பலத்த காற்றுடன் ஆலங்கட்டி மழையும் பனி மழையும் பெய்துள்ளது. இதில் சிக்கிக்கொண்ட வீரர்களில் 21 பேர் சுருண்டு விழுந்து பலியாகியுள்ளனர்.
மொத்தம் 172 வீரர்கள் பங்கேற்ற இந்த மாரத்தான் போட்டியில் 151 வீரர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தரப்பு உறுதி செய்துள்ளது.
சுமார் 700 மீட்புப்பணியாளர்களை சம்பவப்பகுதிக்கு அனுப்பியுள்ளதாக உள்ளூர் நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது. போட்டியில் கலந்து கொண்ட பலருக்கும் திடீரென்று தாக்கிய இந்த தீவிர தட்பவெப்பநிலையால் உடல் உறுப்புகள் மரத்துப் போகும் நிலை ஏற்பட்டதாகவும், ஒருவருக்கு நாக்கு உறைந்து போனதாக உணர்ந்ததாகவும் கூறப்படுகிறது.
இதனையடுத்து போட்டி அமைப்பாளர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, உடனடியாக மீட்புக்குழுவினர் களத்தில் இறக்கப்பட்டனர்.
இச்சம்பவத்தில் 21 பேர்கள் சுருண்டு விழுந்து இறந்துள்ள நிலையில் ஒருவர் மாயமாகியுள்ளதாகவும், அவரை தேடும் பணியும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.