ரூ.28 கோடி சொத்தை நண்பருக்கு எழுதி வைத்த 19 வயது சிறுவன்: முடிவுக்கான பின்னணி காரணம்
சீனாவில் 19 வயது மாணவர் தனது 20 மில்லியன் யுவான் சொத்தை நண்பருக்கு உயில் எழுதி வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நண்பருக்கு ரூ.28 கோடி சொத்தை எழுதி வைத்த மாணவர்
சீனாவின் ஷாங்காய் நகரை சேர்ந்த லீ என்ற 19 வயது மாணவர் தன்னுடைய ஒட்டுமொத்த சொத்தான 20 மில்லியன் யுவானை(இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.28 கோடி) தன்னுடைய நீண்ட கால நண்பருக்கு உயில் எழுதி வைத்த சம்பவம் சமூக ஊடகங்களில் மிகப் பெரிய விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஷாங்காயில் உள்ள உயில் பதிவு மையத்தில் மாணவர் லீ தன்னுடைய உயிலை அதிகாரப்பூர்வமாக பதிவு செய்துள்ளார்.

பெற்றோர் இருவரும் விவாகரத்து பெற்று மறுமணம் செய்து கொண்ட நிலையில், அவர்கள் இருவரும் அன்பளிப்பாக வழங்கிய வீடு மற்றும் பல கோடி மதிப்புள்ள சொத்துகளை மாணவர் லீ தன்னுடைய நீண்ட கால நண்பருக்கு எழுதி வைத்துள்ளார்.
மாணவர் லீ-யின் இந்த முடிவுக்கான காரணம்
லீ-க்கு தீவிர சாகச விளையாட்டுகளில் அதிக ஆர்வம் இருப்பதால் ஏதேனும் விபத்தில் உயிரிழந்து விட்டால் அவரது சொத்துக்கள் தான் விரும்பும் நபருக்கு செல்ல வேண்டும் என்று விரும்பி இந்த முடிவை எடுத்துள்ளார்.
மேலும் தன்னுடைய பெற்றோர்களின் தற்போதைய துணைகளை அந்நியர்களாகவே கருதுவதாகவும், எனவே அவர்கள் இந்த சொத்தை அனுபவிப்பதை நான் விரும்பவில்லை என்றும் லீ வெளிப்படையாக தெரிவித்துள்ளார்.
பொதுவாக வாரிசு அடிப்படையில் குழந்தையின் சொத்துக்கள் அவரது பெற்றோர்களுக்கே திரும்பி செல்லும் நிலையில், சீனாவின் வாரிசுரிமைச் சட்டப்படி திருமணமாகாத மற்றும் குழந்தைகள் இல்லாத லீ-யின் சொத்துக்கள் அவரது உறவு அல்லாத பிற நபருக்கு உயில் எழுத அனுமதிக்கிறது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |