மெக்சிகோவில் பள்ளி மாணவர்கள் மீது மர்ம நபர்கள் சரமாரி துப்பாக்கிச்சூடு! ஆறு பேர் பலியான பரிதாபம்
மெக்சிகோவியில் சாலையில் சென்றவர்கள் மீது மர்ம நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில், பள்ளி மாணவர்கள் உட்பட 6 பேர் பலியாகினர்.
வட அமெரிக்க நாடான மெக்சிகோவில் கடந்த திங்கட்கிழமை இரவு கொடூரமான துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது.
பள்ளி மாணவர்கள் சிலர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தபோது, மர்ம நபர்கள் சிலர் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த சம்பவத்தில் 3 மாணவர்கள், 2 மாணவிகள் மற்றும் 65 வயது மூதாட்டி என மொத்தம் 6 பேர் கொல்லப்பட்டனர்.
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அரங்கேறி வரும் நிலையில், அண்டை நாடான மெக்சிகோவில் இந்த கொடூர சம்பவம் நடந்துள்ளது. இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார், துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
Photo Credit: AFP
கடந்த மாதம் குவானாஜுவாடோ பகுதியில் உள்ள உணவகம் மற்றும் அதன் மதுபான விடுதிகளில் அடுத்தடுத்து துப்பாக்கிச்சூடு நிகழ்த்தப்பட்டது. அதில் 8 பெண்கள் உட்பட மொத்தம் 11 பேர் கொல்லப்பட்டனர்.
மெக்சிகோ அரசாங்கம் 2006ஆம் ஆண்டு டிசம்பர் முதல், போதைப்பொருள் தடுப்பிற்கு என சர்ச்சைக்குரிய ராணுவ நடவடிக்கையை ஆரம்பித்தது. அப்போது முதல் புள்ளி விவரங்களின் படி, அந்நாட்டில் 3,40,000க்கும் அதிகமான கொலைகள் நடந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.