பிரான்சில் பல்வேறு துறைப் பணியாளர்களுக்கு தட்டுப்பாடு... தகுதியுடையவர்களுக்கு ஒரு நல்ல செய்தி
பிரான்சில் பல்வேறு துறைகளில் பணியாளர்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவுவதாக தொழில்துறையினரும், தொழிலாளர் யூனியன்களும் தெரிவித்துள்ளன.
இந்தக் கோடையில் அதனால் பிரான்ஸ் கடும் சிக்கலை சந்திக்க உள்ள நிலையில், தகுதியுடையோருக்கோ அது ஒரு நல்ல வாய்ப்பாக அமைந்துள்ளதை மறுக்க இயலாது.
கட்டுமானப் பணி முதல் காபி ஷாப் பணி வரை, சாரதிகள் முதல் மருத்துவப் பணியாளர்கள் வரை என பல்வேறு துறைகளில் தற்போது பணியாளர் தட்டுப்பாடு நிலவும் நிலையில், கோடையில் நிலைமை இன்னமும் மோசமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
என்னென்ன துறைகளில் பணியாளர் தட்டுப்பாடு எந்த அளவில் உள்ளது என்று பார்க்கலாம்...
உணவகங்கள் மற்றும் தங்கும் விடுதிகள்
அதாவது விருந்தோம்பல் துறை, பொதுமுடக்கம் முதலான காரணங்களால் 2020 பிப்ரவரி முதல், 2021 பிப்ரவரி வரை 237,000 பணியாளர்களை இழந்துள்ளது. ஆகவே, 200,000க்கு அதிகமான பணியிடங்கள் இந்தத் துறைகளில் காலியாக உள்ளன.
பேருந்து சாரதிகள்
செப்டம்பரில் கல்வி ஆண்டு துவங்க உள்ள நிலையில், பேருந்து சாரதிகள் தட்டுப்பாடு பெரும் சிக்கலாக பார்க்கப்படுகிறது.
கடந்த ஆண்டு, சுமார் 10,000 சாரதிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொதுமுடக்கம் ஏற்பட்டதால் பல சாரதிகள் வேலையை விட்டு விட்டு, வேறு வேலைகளுக்குப் போய்விட்டிருக்கிறார்கள்.
அதே நேரத்தில், பலர் ஓய்வு பெற்றிருக்கிறார்கள். ஆக மொத்தத்தில் குறிப்பாக பள்ளிகளுக்கான பேருந்துகளை இயக்கும் சாரதிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
கட்டுமானப் பணியாளர்கள்
கட்டுமானத்துறை ஓரளவு நல்ல முன்னேற்றத்தை சந்தித்து வருவது உண்மைதான் என்றாலும், சரியான பணியாளர்கள் கிடைப்பதில் பிரச்சினைகள் உள்ளன. சமீபத்திய ஆய்வு ஒன்று, 300,000 பணியிடங்கள் இந்தத் துறையில் நிரப்பப்படாமல் உள்ளதாக தெரிவித்துள்ளது.
பருவகாலப் பணியாளர்கள்
பழங்கள் பறித்தல் போன்ற பருவகாலப் பணிகள் மேற்கொள்ளும் பணியாளர்களுக்கு பல்வேறு ஐரோப்பிய நாடுகளில் தட்டுப்பாடு நிலவுகிறது. பிரான்சும் அதற்கு விதிவிலக்கல்ல.
மருத்துவத்துறை பணியாளர்கள்
கடைசியாக, மருத்துவத் துறையில் கடும் பணியாளர்கள் தட்டுப்பாடு நிலவுகிறது.
2021இல், பிரான்ஸ் மருத்துவமனைகளில் 20 சதவிகிதம் படுக்கைகள், பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக மூடப்பட்டன.
கோடையில், நிலைமை இன்னமும் மோசமாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆக மொத்தத்தில், பிரான்ஸ் கடுமையான பணியாளர் தட்டுப்பாட்டை சந்தித்து வருகிறது, மேலும் சந்திக்க உள்ளது. ஆகவே, தகுதியுடையோர் இந்த அரிய வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம்.