ஐசியூவில் அனுமதிக்கப்பட்டுள்ள ஷ்ரேயாஸ் ஐயர் - என்ன நடந்தது?
இந்திய கிரிக்கெட் வீரர் ஷ்ரேயாஸ் ஐயர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஷ்ரேயாஸ் ஐயர் காயம்
அவுஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் மற்றும் 5T20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

இதில், 2-1 என்ற கணக்கில் அவுஸ்திரேலிய அணி, ODI தொடரை வென்றுள்ளது. முதல் 2 போட்டிகளிலும் தோல்வியடைந்த இந்திய அணி, கடைசி போட்டியில் வெற்றி பெற்றது.
சிட்னியில் நடைபெற்ற 3வது ODI போட்டியில், அவுஸ்திரேலியா வீரர் அலெக்ஸ் கேரி அடித்த பந்தை ஷ்ரேயாஸ் ஐயர் பின்னோக்கி ஓடி சென்று அருமையாக கேட்ச் பிடிப்பார்.

அப்போது நிலைதடுமாறி கீழே விழுந்ததில் தரையில் பலமாக மோதி, விலா எலும்பு பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனால் மைதானத்திலே வலியில் துடித்தார்.

இந்திய அணியின் பிசியோதெரபிஸ்ட் கம்லேஷ் ஜெயின் அவரை மைதானத்தை விட்டு வெளியே அழைத்து சென்றார். அதன் பின்னர், அவர் பீல்டிங் செய்ய வரவில்லை.
தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, அவர் மருத்துவமனைக்கு ஸ்கேன் எடுப்பதற்காக அழைத்து செல்லப்பட்டார்.

இந்நிலையில், விலா எலும்பு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதோடு உட்புறத்தில் ரத்த கசிவு ஏற்பட்டுள்ளதால், ஷ்ரேயஸ் ஐயர் தீவிர சிகிச்சை பிரிவில்(ICU) அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இன்னும் ஒரு வார காலத்திற்கு அவர் மருத்துவர்களின் கண்காணிப்பின் கீழ் இருப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயம் காரணமாக அவர் 3 வார காலத்திற்கு கிரிக்கெட் விளையாட முடியாது என கூறப்பட்டது. காயம் பெரிதாக உள்ளதால், எதிர்பார்த்ததை விட அதிக காலம் ஓய்வு தேவைப்படும் என கூறப்படுகிறது.
இதனால், நவம்பர் 30 ஆம் திகதி ராஞ்சியில் தொடங்கும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் ஷ்ரேயாஸ் ஐயர் விளையாடுவது கேள்விக்குறியாகியுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |