வெளிநாட்டில் தமிழர் ஒருவருக்கு உறுதி செய்யப்பட்ட மரண தண்டனை
ஒரு கிலோ அளவுக்கு கஞ்சாவை கடத்த சதி செய்த வழக்கில் சிங்கப்பூர் தமிழர் ஒருவர் அடுத்த வாரம் தூக்கிலிடப்பட உள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
புதன்கிழமை மரண தண்டனை
கடந்த ஆறு மாதங்களில் சிங்கப்பூரில் நிறைவேற்றப்படும் முதல் மரண தண்டனை இதுவெனவும் கூறப்படுகிறது. சிங்கப்பூர் தமிழரான 46 வயது தங்கராஜு சுப்பையாவுக்கு எதிர்வரும் புதன்கிழமை மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.
குறித்த தகவலை சிறை அதிகாரிகள் தரப்பு தங்கராஜுவின் குடும்பத்தினருக்கு அஞ்சல் மூலமாக தெரிவித்துள்ளனர். ஆனால் சிங்கப்பூர் அரசாங்கத்தின் இந்த நடவடிக்கைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
இந்த மரணதண்டனை நிறைவேற்றப்பட்டால், சர்வதேசச் சட்டத்தை மீறுவதாகவும், சிங்கப்பூரின் இந்த நடவடிக்கையை எதிர்த்து தொடர்ந்து போராடுவதை பிடிவாதமாக மீறுவதாகவும் இருக்கும் என அம்னெஸ்டியின் பிராந்திய அலுவலகத்தின் செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கஞ்சா பயன்பாடு குற்றமற்றது
சிங்கப்பூரின் அண்டை நாடான தாய்லாந்து உட்பட உலகின் பலவேறு நாடுகள் கஞ்சா பயன்பாடு குற்றமற்றது என அறிவித்துள்ளதுடன் சிறை தண்டனையையும் கைவிட்டு வருகின்றனர்.
Photo: Kokila Annamalai FB
மேலும், மரண தண்டனையை ரத்து செய்யுமாறு மனித உரிமைக் குழுக்கள் சிங்கப்பூருக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன. தமிழரான தங்கராஜு கடந்த 2017ல் 1,017 கிராம் அளவுக்கு கஞ்சா கடத்தல் சதி திட்டத்திற்கு தூண்டப்பட்டார் என கூறப்படுகிறது.
அதிகாரிகளிடம் கையும் களவுமாக சிக்கிய தங்கராஜுவுக்கு 2018ல் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேல்முறையீட்டு நீதிமன்றமும் தீர்ப்பை உறுதி செய்துள்ளது.
ஒருமுறை கூட கஞ்சா பயன்படுத்தாதவர் தங்கராஜு, அவரை திட்டமிட்டு சிக்க வைத்துள்ளதாகவே ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
மேலும், சட்ட ஆலோசகரின் துணை இல்லாமல் பொலிசார் அவரை விசாரணை செய்துள்ளனர், மட்டுமின்றி அவருக்கு தமிழ் மொழி பெயர்ப்பாளரும் மறுக்கப்பட்டதாக கூறுகின்றனர்.