ஸ்ம்ரிதி மற்றும் பிரதிகா அதிரடி சதம் - அரையிறுதிக்கு முன்னேறுமா இந்தியா?
நியூசிலாந்திற்கு எதிரான போட்டியில் ஸ்ம்ரிதி மந்தனா மற்றும் பிரதிகா ராவல் சதம் அடித்துள்ளனர்.
மழையால் இடைநிறுத்தப்பட்ட போட்டி
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை போட்டியின் இன்றைய போட்டியில் இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் விளையாடி வருகிறது. நாணய சுழற்சியில் வென்ற நியூசிலாந்து மகளிர் அணி, பந்துவீச்சை தேர்வு செய்தது.
முதலில் துடுப்பாட்டத்தை தொடங்கிய இந்திய மகளிர் அணி, ஸ்ம்ரிதி மந்தனா மற்றும் பிரதிகா ராவலின் அதிரடி சதத்தால் 48 ஓவர்களில் 2 விக்கெட்களை இழந்து 329 ஓட்டங்களை குவித்துள்ளது. 48வது ஓவரில் மழை குறுக்கிட்டதால், போட்டி இடைநிறுத்தப்பட்டுள்ளது.
ஸ்ம்ரிதி, பிரதிகா சதம்
ஸ்ம்ரிதி மந்தனா 95 பந்துகளில், 10 பவுண்டரி மற்றும் 4 சிக்ஸர்களுடன் 109 ஓட்டங்கள் குவித்தார்.
இதன் மூலம், ஒருநாள் போட்டியில் அதிக சதம் அடித்த வீராங்கனைகள் பட்டியலில், 14 சதத்துடன் 2வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். 15 சதங்களுடன் அவுஸ்திரேலிய வீராங்கனை மெக் லேனிங் முதலிடத்தில் உள்ளார்.
134 பந்துகளில் 13 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்களுடன் 122 ஓட்டங்கள் எடுத்த பிரதிகா ராவல், 50 ஓவர் உலக கோப்பை தொடரில் தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.
இது ஒருநாள் உலகக்கோப்பை போட்டியில், இந்தியா மகளிர் அணியின் அதிகபட்ச ஓட்டமாகும்.
இந்திய மகளிர் அணி 5 போட்டிகளில் விளையாடி 2 வெற்றி, 3 தோல்விகளுடன் 4 புள்ளிகள் பெற்று புள்ளி பட்டியலில் 4வது இடத்தில் உள்ளது.
அரையிறுதிக்கு தகுதி பெற இன்றைய போட்டியிலும், அடுத்து வர உள்ள வங்கதேசத்திற்கு எதிரான போட்டியிலும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இந்திய அணி உள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |