சோமாலிலாந்து விவகாரம்... இஸ்ரேலின் திட்டம்: கடும் எச்சரிக்கை விடுத்த சீனா
சோமாலியாவில் உள்ள பிரதேசங்களைப் பிரிக்கும் எந்தவொரு முயற்சியையும் சீனா எதிர்க்கும் என்று அந்த நாட்டின் வெளிவிவகார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரிவினைவாத சக்தி
அத்துடன், கிழக்கு ஆப்பிரிக்க நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு சீனாவின் ஆதரவையும் உறுதிப்படுத்தியுள்ளது.

எந்தவொரு நாடும் தனது சொந்த சுயநலன்களுக்காக மற்ற நாடுகளின் உள்நாட்டுப் பிரிவினைவாத சக்திகளை ஊக்குவிக்கவோ அல்லது ஆதரிக்கவோ கூடாது என்று வெளிவிவகார அமைச்சக செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
மேலும், சோமாலிலாந்தில் உள்ள அதிகாரிகளைப் பிரிவினைவாத நடவடிக்கைகளையும் வெளி சக்திகளுடனான கூட்டுச் சதிகளையும் நிறுத்தும்படியும் சீனா வலியுறுத்தியுள்ளது.
முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை சுய-பிரகடனப்படுத்தப்பட்ட சோமாலிலாந்து குடியரசை ஒரு சுதந்திரமான மற்றும் இறையாண்மை கொண்ட நாடாக இஸ்ரேல் முறைப்படி அங்கீகரித்து.
உலகிலேயே சோமாலிலாந்தை அங்கீகரித்த முதல் நாடாகும் இஸ்ரேல். அத்துடன், விவசாயம், சுகாதாரம், தொழில்நுட்பம் மற்றும் பொருளாதாரம் ஆகிய துறைகளில் சோமாலிலாந்துடன் உடனடி ஒத்துழைப்பையும் நாடியது.

எகிப்து மற்றும் துருக்கி
ஆனால், சோமாலிலாந்தில் இஸ்ரேலின் எந்தவொரு பிரசன்னமும் ஒரு இராணுவ இலக்காகக் கருதப்படும் என்று யேமனின் ஹவுதி போராளிக் குழுவின் தலைவர் எச்சரிக்கை விடுத்தார்.
மேலும் சோமாலிலாந்துடன் இஸ்ரேல் நல்லுறவை ஏற்படுத்துவது செங்கடலுக்குச் சிறந்த அணுகலை வழங்கும் என்றும், அதன் மூலம் யேமனில் உள்ள ஹவுதி கிளர்ச்சியாளர்களைத் தாக்க முடியும் என்றும் பிராந்திய ஆய்வாளர்கள் நம்புகின்றனர்.

சோமாலிலாந்தை இஸ்ரேல் அங்கீகரித்ததை ஆப்பிரிக்க ஒன்றியம், எகிப்து மற்றும் துருக்கி ஆகிய நாடுகள் விமர்சித்துள்ளன. அத்துடன், ஆறு நாடுகளைக் கொண்ட வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் மற்றும் சவுதி அரேபியாவைத் தளமாகக் கொண்ட இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பும் தங்கள் எதிர்ப்பை பதிவு செய்துள்ளன.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |