நேபாளத்தில் பெரு வெள்ளம்: மரத்தில் ஏறி உயிர் தப்பிய 8 வயது சிறுவன்: மகனை தேடி அலைந்த தாய்
ஒட்டுமொத்த நோபாளத்தையும் பெரு வெள்ளம் புரட்டி போட்டுள்ள நிலையில், நீண்ட துயரத்திற்கு பிறகு தாயும், மகனும் இணைந்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மகனை இழந்த தாய்
கடந்த புதன்கிழமை ஏற்பட்ட பிரம்மாண்ட பனிப்பாறை சரிவு சம்பவம் ராட்சத வெள்ளப்பெருக்கை ஏற்படுத்தி வடக்கு நேபாளத்தை முற்றிலும் நிலைகுலைய வைத்துள்ளது.
இந்த மோசமான தருணத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, மாட்டி மாயா தமாங்(Matti Maya Tamang) என்ற தாய் தன்னுடைய இரண்டு மகன்களையும் பள்ளிப் பேருந்தில் ஏற்றி விட்டு வீடு திரும்பியுள்ளார்.

பேரழிவு செய்தியை கேட்ட தாய் தமாங் உடனடியாக வீட்டில் இருந்து தன்னுடைய குழந்தைகள் படிக்கும் பள்ளிக்கு செல்ல முயன்றுள்ளார்.
ஆனால் வழக்கமாக செல்லும் பாதைகள் அனைத்தும் கற்கள், சேறுகள் மற்றும் வெள்ள நீரால் அழிந்து போயிருந்தது.
துயரத்தின் உச்சத்துக்கு சென்ற தாய், ஒவ்வொரு முகாம்களுக்கும் சென்று தேடியுள்ளார்.
தமாங் தன்னுடைய இளைய மகனை கண்டுபிடித்து விட்ட போதிலும், எந்தவொரு முகாமிலும் அவருடைய மூத்த மகனான 8 வயது சோயல் காலே (Zoyal Ghale)-வின் பெயர் இடம்பெறவில்லை.
உயிர் தப்பிய சிறுவன்
வெள்ளப் பேரழிவின் போது பள்ளியில் இருந்த 8 வயது சிறுவன் சோயல் காலே (Zoyal Ghale), தன் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக அருகிலிருந்த காட்டுக்குள் தப்பியோடியுள்ளார்.
இருப்பினும் பாய்ந்து வந்த தண்ணீர் அவரை புரட்டிப் போட்ட நிலையில், இடிபாடுகளில் இருந்து தப்பிக்க மரங்களின் மீது சோயல் காலே ஏறியுள்ளான்.

மீட்பு பணியாளர்கள் அவனை கண்டுபிடித்த போது அவனது காலில் எலும்பு முறிவு ஏற்பட்டிருந்துள்ளது. அத்துடன் முகம் முழுவதும் காயங்கள் ஏற்பட்டிருந்தது.
மருத்துவமனைக்கு செல்லும்படி காவல்துறை அதிகாரிகள் கொடுத்த இரண்டு 10 ரூபாய் நோட்டுகளை சோயல் காலே தன்னுடைய கையில் இறுகப் பிடித்துக் கொண்டு இருந்துள்ளான்.
நுவாகோட் மாவட்டத்தில் உள்ள சிறிய மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட சோயல் தன்னுடைய குடும்பத்தினரை தொடர்பு கொள்ள முடியவில்லை.
பின்னர் சோயல் குடும்பத்தினரை கண்டுபிடிப்பதற்காக பத்திரிக்கை குழுவினர் சிறு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.
இணைந்த தாய் - மகன்
எப்படியோ பத்திரிகையாளர் சஹானா பஜ்ராச்சார்யாவின் தொலைபேசி எண்ணை பெற்று தமாங் பேசிய பிறகு தான் அவரின் துயரம் துடைத்தெறியப்பட்டுள்ளது.
அப்போது, சோயல் உயிருடன் இருப்பதாகவும், காத்மாண்டு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு இருப்பதாகவும் பத்திரிகையாளர் சஹானா பஜ்ராச்சார்யா தெரிவித்துள்ளார்.
இதையடுத்து வெள்ளிக்கிழமை பத்திரிகையாளர்களின் உதவியோடு காத்மாண்டு மருத்துவமனைக்கு சென்ற தமாங், தன்னுடைய மகன் சோயல் காலே-வை கட்டியணைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
ஆயிரக்கணக்கான குடும்பங்கள் வெள்ளப் பெருக்கில் காணாமல் போயுள்ள நிலையில், தமாங்கின் குடும்பம் அதிர்ஷ்டவசமாக மீண்டுள்ளது.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |