12 வயதில் சென்ற மகன்.,40 ஆண்டுகள் கழித்து சந்தித்த தாய்: உணர்வுப்பூர்வமான நிகழ்வு
தமிழக மாவட்டம் தேனியில் வீட்டை விட்டு 12 வயதில் வெளியேறியவர், 40 ஆண்டுகள் கழித்து தனது தாயை சந்தித்த நிகழ்வு நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
வீட்டை விட்டு வெளியேறிய மகன்
தேனி மாவட்டம் கதிர்நரசிங்கபுரத்தைச் சேர்ந்த தம்பதி நடராஜன், ருக்குமணி. இவர்களுக்கு குமார், செந்தில், முருகன் ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர்.
1985ஆம் ஆண்டு நடராஜன் குடும்பத்துடன் சென்னைக்கு சென்றுள்ளனர். அப்போது மூத்த மகன் குமாரை வேலைக்கு செல்லுமாறு பெற்றோர் வலியுறுத்தியதால், அவர் கோபித்துக் கொண்டு வீட்டைவிட்டு 12 வயதில் வெளியேறியிருக்கிறார். எங்கு தேடியும் அவரது குடும்பத்தால் குமாரை கண்டுபிடிக்க முடியவில்லை.
இதற்கிடையில், கணவர் இருந்ததால் இரண்டாவது மகன், மருமகளுடன் ருக்குமணி கதிர்நரசிங்கபுரத்தில் குடியேறினார்.
தாயை சந்தித்த மகன்
இந்த நிலையில், குமார் தனது குடும்பத்துடன் சில நாட்களுக்கு முன் தேனியில் உள்ள வேலப்பர் கோவிலுக்கு சென்றுள்ளார்.
அப்போது சொந்த ஊரின் நினைவு வந்து கதிர்நரசிங்கபுரத்திற்கு சென்றுள்ளார். அங்கு தனது குடும்ப விவரங்களை மக்களிடம் கூற, தாயார் வசிக்கும் இடத்தைப் பற்றி கூறியுள்ளனர்.
உடனே தாய் வசிக்கும் வீட்டிற்கு சென்ற குமார், தாயிடம் நான்தான் உங்கள் மகன் குமார் என்று கூறியுள்ளார்.
ஆச்சரியத்தில் உறைந்த தாய் ருக்குமணி, ஆனந்த கண்ணீர் சிந்தியபடி மகனை கட்டித் தழுவியுள்ளார். அதேபோல் குமாரின் 90 வயதை கடந்த பாட்டியும் மகிழ்ச்சியடைந்துள்ளார்.
அத்துடன் குமாரின் உடன் பிறந்த சகோதரர்கள் மற்றும் அவரது குடும்பத்தினரும் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். இந்நிகழ்வு அப்பகுதி மக்களுக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |