காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு - தாய் மீது பெட்ரோல் குண்டு வீசிய மகன்
தமிழகத்தில் காதல் திருமணத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த தாயை நோக்கி மகன் பெட்ரோல் குண்டு வீசிய சம்பவம் நடந்துள்ளது.
திருமணத்திற்கு எதிர்ப்பு
சென்னையின் கொளத்தூர், ஹரிதாஸ் 2வது தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சரஸ்வதி.
இவரது மகன் தினேஷ் (25), ரஜித்தா(25) என்ற பெண்ணை காதலித்துள்ளார்.
இந்த காதலுக்கு அவரின், பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில், கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன் எதிர்ப்பை மீறி அந்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.
எதிர்ப்பை மீறி திருமணம் செய்ததால் அவரது குடும்பத்தினர் அவரை புறக்கணித்துள்ளனர்.
வேலை இல்லாமல் வறுமையில் வாடிய தினேஷ், வீட்டு வாடகை கூட கொடுக்க முடியாமல் கஷ்டப்பட்டுள்ளார்.
பெட்ரோல் குண்டு வீச்சு
தாயாரிடம் பண உதவி கேட்டபோது அவர் கொடுக்க மறுத்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த தினேஷ், கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி இரவு, தனது மனைவியுடன் தாய் வீட்டிற்கு வந்து, பெட்ரோல் குண்டு ஒன்றை தாயை நோக்கி வீசியுள்ளார்.
உடனடியாக அவரின் தாயார் கதவை மூடியதால், பெட்ரோல் குண்டு வீட்டு கதவில் பட்டு தீ பற்றி எரிந்தது.
தொடர்ந்து அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்ததோடு, அங்கிருந்த 2 இருசக்கர வாகனங்களையும் சேதப்படுத்தி விட்டு, தப்பிச் சென்றார்.
அக்கம்பக்கத்தினர் உதவியுடன், தீயை அணைத்த சரஸ்வதி, இந்த விவகாரம் குறித்து கொளத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், தலைமறைவாக இருந்த தினேஷ் மற்றும் அவரைது மனைவியைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |