அறிமுக டெஸ்டிலேயே மிரட்டும் இலங்கை வீரர்! முக்கிய விக்கெட்டுகள் காலி..திணறும் வங்காளதேசம்
இலங்கை வீரர் சோனல் தினுஷா தனது முதல் டெஸ்ட் போட்டியிலேயே இரண்டு விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.
விக்கெட் வீழ்ச்சி
கொழும்பில் நடந்து வரும் டெஸ்ட் போட்டியில் 24 வயதான சோனல் தினுஷா (Sonal Dinusha) இலங்கை அணியில் அறிமுகமானார்.
துடுப்பாட்டத்தை துவங்கிய வங்காளதேச அணி 5 ஓட்டங்கள் எடுப்பதற்குள் முதல் விக்கெட்டை இழந்தது.
அதன் பின்னர் மொமினுள் ஹக் 21 ஓட்டங்கள் வெளியேற, நஜ்முல் ஷாண்டோவின் (8) விக்கெட்டை விஷ்வா பெர்னாண்டோவும், ஷாத்மான் இஸ்லாமின் விக்கெட்டை தரிந்து ரத்நாயகேவும் கைப்பற்றினர்.
வங்காளதேச அணி 76 ஓட்டங்களுக்கு 4 விக்கெட் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. பின்னர் ஆட்டம் தொடர்ந்தபோது லித்தன் தாஸ் மற்றும் முஷ்பிகுர் ரஹீம் பார்ட்னர்ஷிப் அமைத்தனர்.
அபார பந்துவீச்சு
அணியின் ஸ்கோர் 143 ஆக உயர்ந்தபோது, இந்தக் கூட்டணியை அறிமுக வீரர் சோனல் தினுஷா பிரித்தார்.
அவரது பந்துவீச்சில் 34 (56) ஓட்டங்கள் எடுத்திருந்த லித்தன் தாஸ் (Litton Das), குசால் மெண்டிஸிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
அதனைத் தொடர்ந்து ரஹீமும் 35 (75) ஓட்டங்களில் சோனல் பந்துவீச்சில் விஷ்வா பெர்னாண்டோவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
இதுவரை 6 ஓவர்கள் வீசியுள்ள சோனல் தினுஷா, 3 ஓவர்களை மெய்டன் செய்து 8 ஓட்டங்கள் மட்டுமே கொடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |