கட்சி விழாவில் சோனியா ஏற்றிய கொடி! அப்படியே கீழே வந்ததால்...ஆடிப்போன காங்கிரஸ் கட்சியினர்!
காங்கிரஸ் கட்சி விழாவின் போது, சோனியா காந்தி ஏற்றிய கொடி அப்படியே கீழே விழுந்த வீடியோ இணையத்தில் அதிக அளவில் பகிரப்பட்டு வருகிறது.
டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் 137-வது நிறுவன விழா இன்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள், செயற்குழு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
அடுத்த ஆண்டு, உத்திர பிரதேசம், பஞ்சாப், கோவா, உத்தரகாண்ட் போன்ற மாநிலங்களில் தேர்தல் நடக்க உள்ளதால், இந்த கூட்டம் மிகவும் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த விழாவின் போது, சோனியா காந்தி கொடி ஏற்றியபோது கொடி திடீரென கீழே விழுந்தது. அதாவது சோனியா காந்தி கொடியை மேலே ஏற்றிவிட்டு அதை விரிப்பதற்காக கயிற்றின் இன்னொரு முனையை இழுத்தார்.
அப்போது அவரால் இழுக்க முடியவில்லை என்பதால் அருகே இருந்த நிர்வாகியும் சேர்ந்து கொடியை விரிப்பதற்காக கயிறை இழுக்க, கொடி வேகமாக சரசரவென கீழே வந்தது. கீழே வந்த கொடி அப்படியே சோனியா காந்தி கைகளில் விழுந்தது.
ஆனால் துரிதமாக செயல்பட்ட சோனியா காந்தி அதை தரையில் படுவதற்கு முன் கைகளில் பிடித்தார்.
இதைக் கண்ட காங்கிரஸ் கட்சியினர், ஏற்றிய கொடி இப்படி கீழே விழலாமா என்று ஆடிப் போகினர். அதன் பின் காங்கிரஸ் நிர்வாகி ஒருவர், கொடி கம்பத்தில் ஏறி கொடியை ஏற்றினார்.