இந்திய பயணிகளை ஈர்க்கும் நோக்கில் விசா விதிகளை தளர்த்தும் பிரபல நாடு!
இந்தியா மற்றும் சீனாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகளை அதிகரிக்க தென்னாப்பிரிக்கா புதிய விசா சீர்திருத்தங்களை அறிவித்துள்ளது.
இதன் மூலம், உலகின் மிக அதிக மக்கள் தொகை கொண்ட இரண்டு நாடுகளின் பயணிகளை ஈர்க்க தென்னாப்பிரிக்கா திட்டமிட்டுள்ளது.
பல்வேறு மேற்கு நாடுகளைச் சேர்ந்த பயணிகள், அதாவது அமெரிக்கா மற்றும் பிரித்தானிய போன்ற நாடுகளிலிருந்து வரும் பயணிகள் குறுகிய கால பயணங்களுக்கு விசா பெற தேவையில்லை.
ஆனால், இந்தியா மற்றும் சீனாவில் இருந்து வரும் சுற்றுலா பயணிகள் கட்டாயமாக முன் அனுமதி பெற வேண்டும். இது சுற்றுலா திட்டங்களுக்கு தடையாக உள்ளது.
2025 ஜனவரியில் “நம்பிக்கைக்குரிய சுற்றுலா நிறுவனங்கள்” (Trusted Tour Operators) என்ற திட்டத்தை தென்னாப்பிரிக்கா அறிமுகப்படுத்தவுள்ளது.
இதன்படி, தென்னாப்பிரிக்க அதிகாரிகளால் பரிசோதிக்கப்பட்ட சுற்றுலா நிறுவனங்கள் இந்த இரு நாடுகளிலிருந்து வரும் பயண குழுக்களை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்கும்.
இந்திய சுற்றுலா பயணிகளை ஈர்க்க தாய்லாந்து போன்ற நாடுகள் விசா விதிகளை தளர்த்தி வெற்றி பெற்றுள்ளன. மேலும், பெரு மற்றும் மொராக்கோ இந்திய நகரங்களில் சுற்றுலா அலுவலகங்களை துவக்கி இந்த முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.
சவுதி அரேபியா 2030-ஆம் ஆண்டுக்குள் 7.5 மில்லியன் இந்திய பயணிகளை ஈர்க்க விரும்புகிறது. இதற்காக அந்த நாடு இந்தியர்களுக்கு நான்கு நாள் four-day stopover visa-வை அறிமுகப்படுத்தியுள்ளது.
“சுற்றுலா என்பது தென்னாப்பிரிக்காவின் இயல்பான வருவாய் வாய்ப்புகளில் ஒன்று. இதைப் பயன்படுத்தி சிறந்து விளங்க வேண்டும்,” என்று உள்துறை அமைச்சர் லியான் ஷ்ரைபர் கூறினார்.
சீனா மற்றும் இந்தியா போன்ற முக்கிய சந்தைகளில் தென்னாப்பிரிக்கா பின்னடைவு கண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இந்த மாற்றங்கள் தற்காலிகமாக செயல்படுத்தப்பட்டாலும், எதிர்காலத்தில் தென்னாப்பிரிக்கா ஒரு மின்விசா (e-visa) அமைப்பை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.
சுற்றுலா மட்டுமின்றி, வேலைவாய்ப்புக்கான அனுமதி முறைகளையும் சீர்திருத்தி, தென்னாப்பிரிக்கா திறமையான தொழிலாளர்களின் பற்றாக்குறையை சரிசெய்ய விரும்புகிறது.
2023-ஆம் ஆண்டில் அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவில் இருந்து 3.5 லட்சம் பயணிகள் வந்துள்ள நிலையில், இந்தியாவில் இருந்து வெறும் 80,000 பேரும், சீனாவில் இருந்து 37,000 பேரும் வந்துள்ளனர். இதை மாற்றுவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த முடியும் என அரசு நம்புகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |