தென் கொரியாவில் ஷாப்பிங் வளாகத்தில் கத்திக்குத்து: 59 வயது முன்னாள் குற்றவாளி கைது
South Korea Stabbing Incident at Incheon: தென் கொரியாவில் ஷாப்பிங் வளாகத்தில் நடந்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் 59 வயது நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
தென்கொரியாவில் நடந்த கத்திக்குத்து தாக்குதல்
செவ்வாய்க்கிழமை பிற்பகலில் தென் கொரியாவின் இஞ்சியோன் நகரில் உள்ள ஷாப்பிங் வளாகத்தில் கத்திக்குத்து தாக்குதல் சம்பவம் ஒன்று நடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் 6 பெண்கள் மற்றும் 2 ஆண்கள் உட்பட 8 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் ஒருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருப்பதாகவும், மற்ற 7 நபர்களுக்கும் முதுகு மற்றும் தோள்பட்டை பகுதிகளில் காயம் ஏற்பட்டு இருப்பதாகவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டு கைகளிலும் கத்தியை சுற்றிக்கொண்டு தாக்குதலில் ஈடுபட்ட 59 வயது நபரை பொலிஸார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.
தாக்குதலின் போது கைது செய்யப்பட்ட நபர் அவரது காலில் எலக்ட்ரானிக் கண்காணிப்பு கருவியை அணிந்து இருந்ததாக உள்ளூர் செய்திகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
மேலும் அவர் ஏற்கனவே முன்னாள் மனைவியை கொலை செய்ய முயற்சித்த வழக்கில் நான்கு ஆண்டுகள் சிறைத் தண்டனை வகித்தவர் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இந்த தாக்குதலுக்கான பின்னணி காரணம் குறித்து பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.