மாதவிடாய் நாட்களில் விடுமுறை: முதல்முறையாக சட்டமியற்றும் ஐரோப்பிய நாடு
மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய மருத்துவ விடுப்பு வழங்கும் சட்டத்திற்கு ஸ்பெயின் நாடாளுமன்றம் இன்று இறுதி ஒப்புதல் அளித்துள்ளது.
முதல் ஐரோப்பிய நாடு
மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு அத்தகைய விடுப்பு வழங்கும் சட்டத்தை முன்வைக்கும் முதல் ஐரோப்பிய நாடு ஸ்பெயின் எனவும் கூறுகின்றனர்.
இந்த விவகாரம் தொடர்பில் ஸ்பெயின் நாடாளுமன்றத்தில் முன்னெடுக்கப்பட்ட வாக்கெடுப்பில் ஆதரவாக 185 வாக்குகளும் எதிராக 154 வாக்குகளும் பதிவாகியுள்ளது. மாதவிடாய் கால விடுப்பு என்பது உலகில் மிக சில நாடுகளில் மட்டுமே அமுலில் உள்ளது. ஜப்பான், இந்தோனேசியா மற்றும் ஜாம்பியா நாடுகளில் ஏற்கனவே சட்டமியற்றப்பட்டுள்ளது.
@reuters
இந்த நிலையில் ஸ்பெயின் நாட்டில் முதன்முறையாக மாதவிடாய் கால விடுப்பு சட்டமாக இயற்றப்பட உள்ளது. மேலும், மருத்துவர் ஒருவரின் ஒப்புதல் பெற்று விடுப்பு எடுத்துக்கொள்ளலாம். ஆனால் எத்தனை நாட்கள் அனுமதிக்கப்படும் என்பது தொடர்பில் சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை.
மட்டுமின்றி, ஸ்பெயின் நாட்டில் முன்னெடுக்கப்பட்ட ஆய்வு ஒன்றில், மாதவிடாய் ஏற்படும் பெண்களில் மூன்றில் ஒரு பகுதியினர் கடுமையான வலியால் பாதிக்கப்படுகின்றனர் என தெரியவந்துள்ளது.
தொழில் சங்கங்கள் எச்சரிக்கை
மாதவிடாய் கால விடுப்பு என்பது, இனி பெண்களை பணியிடங்களில் இருந்து நீக்கும் சூழலை உருவாக்கும் எனவும், ஆண்கள் மட்டுமே பணியமர்த்தப்படும் நிலை உருவாகலாம் எனவும் சில தொழில் சங்கங்கள் எச்சரித்துள்ளன.
மாதவிடாய் விடுப்பு தொடர்பான புதிய சட்டத்தில் 16 மற்றும் 17 வயதில் பெற்றோரின் அனுமதியின்றி சிறார்களுக்கு கருக்கலைப்பு செய்ய அனுமதிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.