அமெரிக்க போர் விமானங்கள் வான்வெளியை பயன்படுத்த தடை: ஐரோப்பிய நாடொன்றின் அதிரடி முடிவு
ஈரான் மீதான தாக்குதலில் ஈடுபட்டு போர் விமானங்கள் ஸ்பெயின் நாட்டு வான்வெளியை பயன்படுத்த அந்நாட்டு அரசு தடை விதித்துள்ளது.
தீவிரமடையும் ஈரான் போர்
ஈரானுக்கு எதிரான அமெரிக்க மற்றும் இஸ்ரேலிய படைகளின் இராணுவ நடவடிக்கைகள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஈரான் போரில் ஈடுபடும் அனைத்து போர் விமானங்களும் ஸ்பெயின் நாட்டு வான்வெளியை பயன்படுத்த அந்நாட்டு அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக தடை விதித்துள்ளது.
இந்த தடை நடவடிக்கைகள் அனைத்து போர் மற்றும் போக்குவரத்து பயணங்கள் இரண்டிற்கும் பொருந்தும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்பெயின் அறிவித்துள்ள இந்த தடையின் கீழ், போரில் ஈடுபடும் எந்தவொரு இராணுவ விமானமும் ஸ்பெயினில் இருந்து புறப்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவில் இருந்து புறப்படும் அமெரிக்க போர் விமானங்களும் ஸ்பெயின் வான்வெளியை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
ராஜதந்திர உறவில் மாற்றம் இல்லை
வான்வழி தடை நடவடிக்கையானது சட்ட மற்றும் தார்மீக கொள்கை சார்ந்த விஷயம் என்று ஸ்பெயின் பொருளாதார அமைச்சர் கார்லோஸ் கியூர்போ குறிப்பிட்டுள்ளார்.
சர்வதேச சட்டங்களை மீறி ஒருதலை பட்சமாக தொடங்கப்பட்ட போரில் ஸ்பெயின் பங்கேற்காது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் ஈரானுக்கு எதிராக ராணுவ தளங்களை பயன்படுத்த அனுமதி மறுத்தற்காகவோ, வான்வெளியை மூடியதற்காகவோ அமெரிக்காவுடனான ராஜதந்திர உறவில் மாற்றம் இல்லை என்றும் அது சீராக இருப்பதாகவும் கியூர்போ தெரிவித்துள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |