ஆசிரியையை கண்ணில் கத்தியால் குத்திய 14 வயது மாணவன்! மேலும் இரு மாணவர்களுக்கு வகுப்பறையில் கத்திக்குத்து
ஸ்பெயினில் பள்ளி ஒன்றில் 14 வயது மாணவன் ஒருவன், வகுப்பறையில் தன் ஆசிரியை மற்றும் சக மாணவர்களை கத்தியால் குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
கத்தியால் தாக்கிய மாணவன்
தெற்கு ஸ்பெயினின் Jerez de la Frontera நகரில் உள்ள பள்ளி ஒன்றில் காலைவேளையில் வகுப்புகள் தொடங்கும்போது அதிர்ச்சிகர சம்பவம் நடந்துள்ளது.
14 வயது மாணவர் ஒருவர் கையில் கத்தியுடன் வகுப்பறையில் நுழைந்துள்ளார். கண்ணில் பட்டவரை எல்லாம் அவர் கத்தியால் குத்தத் தொடங்கியுள்ளார்.
ஆசிரியர்கள் அவரை தடுக்க முயன்றபோது, குறித்த மாணவர் ஆசிரியை ஒருவரின் கண்ணில் கத்தியால் குத்தியுள்ளார். அத்துடன் மேலும் இரு ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்களையும் அவர் தாக்கியுள்ளார்.
மாணவர் கைது
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிஸார் விரைந்து வந்து குறித்த மாணவரை கைது செய்தனர். காயமடைந்த ஆசிரியர்கள், மாணவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஆனால் கண்ணில் கத்தியால் குத்தப்பட்ட ஆசிரியை ஆபத்தான நிலையில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. தங்கள் பிள்ளைகளை பள்ளியில் இறக்கிவிட்டுவிட்டு வந்த பிற மாணவர்களின் பெற்றோர்கள், இச்சம்பவம் குறித்து அறிந்து பீதியடைந்தனர்.
அவர்கள் பள்ளி வாசலில் நின்றுகொண்டு, தங்கள் குழந்தைகள் காயமின்றி வெளிவருவார்கள் என்று எதிர்பார்த்து காத்திருந்தனர். தாக்குதல்தாரி மாணவர் தற்போது Jerez பொலிஸாரால் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |