உலக நாடுகளில் பீதியை கிளப்பும் ஆபத்தான கருப்பு பூஞ்சை பாதிப்பு: கண்களை இழந்த பலர்
இந்தியாவில் அடையாளம் காணப்பட்ட கொரோனா மாறுபாட்டுடன் தொடர்புடைய கருப்பு பூஞ்சை பாதிப்பானது தற்போது உலக நாடுகள் சிலவற்றில் கண்டறியப்பட்டுள்ளது.
சிலி மற்றும் உருகுவேயில் கருப்பு பூஞ்சை பாதிப்பு தொடர்பில் சுகாதார அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தொற்று வேகமாக பரவுகிறது என்ற அச்சத்தைத் தூண்டியுள்ளது.
பூஞ்சைகளால் ஆன தொற்று முன்னரே அடையாளம் காணப்பட்டாலும் தற்போது பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை ஆபத்தான வகையில் அதிகரித்து வருவதாக சிலி நாட்டு சுகாதாரத்துறை அச்சம் தெரிவித்துள்ளது.
உருகுவே நாட்டில், கடந்த வாரம் கொரோனா பாதிப்பில் இருந்து முழுவதுமாக குணமடைந்துள்ள 50 வயது நபர் தற்போது பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது.
கருப்பு பூஞ்சை பாதிப்பு என அடையாளம் காணப்பட்டுள்ள Mucormycosis தொற்றானது கொரோனாவால் தடுமாறி வரும் இந்தியாவில் ஆயிரக்கணக்கானவர்களுக்கு கண்டறியப்பட்டுள்ளது.
பலர் கண்களை இழக்கும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாகவும் பகீர் தகவல் வெளியாகியுள்ளது. நாளுக்கு நாள் அதிகரிக்கும் கொரோனா பாதிப்புகள் மற்றும் இறப்பு எண்ணிக்கையால் இந்திய சுகாதாரத்துறை ஸ்தம்பித்துள்ள நிலையில்,
தற்போது கருப்பு பூஞ்சை பாதிப்பும் மருத்துவர்களை கவலை கொள்ள வைத்துள்ளது. இதுவரை சுமார் 8,800 பேர்களுக்கு இந்தியாவில் கருப்பு பூஞ்சை பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
கருப்பு பூஞ்சை பாதிப்பை எதிர்கொள்ள amphotericin B என்ற மருந்து பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில், தற்போது இந்தியாவில் அந்த மருந்துக்கான தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
பொதுவாக இந்தியாவில் ஆண்டுக்கு 3 அல்லது நான்கு பேர்களுக்கு மட்டுமே கருப்பு பூஞ்சை நோய் அடையாளம் காணப்பட்டு வந்த நிலையில், தற்போது நாளுக்கு 5 முதல் 6 பேர்கள் கருப்பு பூஞ்சை பாதிப்புடன் மருத்துவர்களை நாடும் மோசமான நிலை ஏற்பட்டுள்ளது.
பல நாடுகளில் ஏற்கனவே மிக அரிதாக காணப்பட்ட இந்த கருப்பு பூஞ்சை பாதிப்பானது, இன்னொரு சுகாதார அவசர நிலையை கொண்டுவருமா என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்க ஆய்வாளர்களின் கணிப்புப்படி, இந்த நோயின் இறப்பு விகிதம் 54 சதவீதம் என தெரிய வந்துள்ளது.
கருப்பு பூஞ்சை பாதிப்பானது குறிப்பாக நீரிழிவு நோயாளிகளுக்கு அல்லது புற்றுநோயாளிகள் மற்றும் எச்.ஐ.வி அல்லது எய்ட்ஸ் உள்ள நபர்களுக்கு உயிர் அபாயத்தை ஏற்படுத்தலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.