காபூலில் இருந்து வெளியேறிய கடைசி அமெரிக்க விமானத்தில் தப்பிய மர்ம நபர்: குழம்பும் அதிகாரிகள்
காபூல் விமான நிலையத்தில் இருந்து கடைசியாக வெளியேறிய அமெரிக்க விமானத்தில் ஸ்லோவாக்கிய நாட்டவர் ஒருவர் பயணித்ததாக வெளியான தகவல் தற்போது கடும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
காபூல் விமான நிலையத்தில் இருந்து கடைசியாக வெளியேறிய அமெரிக்க ராணுவ விமானம் தொடர்பில் வெளியான தகவல் சர்வதேச ஊடகங்களில் தலைப்புச் செய்தியானது.
ஆகஸ்ட் 30ம் திகதி நள்ளிரவில் காபூல் விமான நிலையம் மொத்தமாக மூடப்பட்டு, தாலிபான்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த விவகாரம் தொடர்பிலும், அமெரிக்க அதிகாரிகளிடம் சந்தேகம் எழுந்தது.
இருப்பினும் ஆகஸ்ட் 30ம் திகதி இரவு 11.59 மணிக்கு பின்னர் மொத்தம் 660 பேர்களுடன் அமெரிக்க விமானம் காபூல் விமான நிலையத்தில் இருந்து வெளியேறியதாக உத்தியோகப்பூர்வ தகவல் வெளியானது.
இந்த நிலையிலேயே, குறித்த விமானத்தில் ஸ்லோவாக்கிய நாட்டவர் ஒருவர் காபூலில் இருந்து வெளியேறியது தொடர்பில் பரபரப்பாக பேசப்பட்டது. ஆனால் ஸ்லோவாக்கிய அரசாங்கம் தொடர்பில் குறித்த தகவல் நிராகரிக்கப்பட்டதுடன், அப்படியான ஒரு அதிகாரி காபூலில் தங்கியிருக்கவில்லை எனவும் உறுதிப்படுத்தியுள்ளது.
இதனையடுத்து அந்த மர்ம நபர் யார் என்ற கேள்வி அமெரிக்க உயர்மட்ட அதிகாரிகள் தரப்பில் எழுந்துள்ளது. அமெரிக்கா நிர்வாகிகள் வெளியிட்ட பட்டியலில், அமெரிக்க கடவுச்சீட்டு கொண்ட 29 பேர்கள், 582 ஆப்கன் மக்கள், 36 சிறப்பு அனுமதி பெற்றவர்கள், ஒரு நேட்டோ அதிகாரி, 13 பத்திரிகையாளர்கள் மற்றும் ஒருவர் ஸ்லோவாக்கிய நிர்வாகி என குறித்த பட்டியலில் தெளிவுபடுத்தியுள்ளனர்.
ஆனால் குறித்த பட்டியலில் இடம்பெற்ற ஸ்லோவாக்கிய நாட்டவர், கடைசி நிமிடம் வரையில் ஆப்கானிஸ்தானில் என்ன செய்துகொண்டிருந்தார் என்ற கேள்வியும் முன்வைக்கப்பட்டுள்ளது.
ஆகஸ்ட் 28ம் திகதி மூவர் குழு ஒன்று ஸ்லோவாக்கியாவில் இருந்து காபூல் சென்றதை உள்ளூர் பத்திரிகைகள் உறுதி செய்துள்ளன. 28 ஆப்கன் மக்களை வெளியேற்றவே இந்த ஸ்லோவாக்கிய குழு காபூல் சென்றுள்ளது. இதில் 6 பேர்கள் ஸ்லோவாக்கிய குடியிருப்பு அனுமதி பெற்றவர்கள் எனவும், எஞ்சியவர்கள் அவர்களது குடும்பத்தினர் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஸ்லோவாக்கியா குறிப்பிட்ட 28 பேர்களையும் மீட்டுள்ளதாக அறிவித்த நிலையில், அமெரிக்கா விமானத்தில் பயணித்ததாக கூறப்படும் அந்த மர்ம நபர் தொடர்பில் இதுவரை மர்மம் நீடித்து வருகிறது.