சாக்லேட்கள், வாசனை திரவியங்கள் போன்ற 300 பொருட்களுக்கு இறக்குமதி தடை: இலங்கை அரசு உத்தரவு
இலங்கையில் 300 நுகர்வோர் பொருட்களை இறக்குமதி செய்ய தடை.
ஆகஸ்ட் 23க்கு முன்பு ஏற்றுமதி செய்யப்பட்ட சரக்குகள் அனுமதிக்கப்படும்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார நெருக்கடியை சீர்செய்யும் முயற்சியாக சாக்லெட், வாசனை திரவியங்கள் மற்றும் ஷாம்பூக்கள் போன்ற 300 நுகர்வோர் பொருட்களை இறக்குமதி செய்ய தடைவிதித்துள்ளனர்.
இலங்கையில் 1948 ஆம் ஆண்டு சுகந்திரத்திற்கு பின்னர் நாட்டில் மிக மோசமான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
அந்நிய செலாவணி கையிருப்பு நெருக்கடியால் அத்தியாவசியப் பொருள்களின் பற்றாக்குறை அதிகரித்ததை தொடர்ந்து, நாட்டு மக்கள் பல்லாயிரக்கணக்கானோர் வீதிகளில் ஆர்ப்பாட்டங்களில் இறங்கினர்.
Reuters
இதனைத் தொடர்ந்து இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பொருளாதாரத்தை சீர்திருத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அந்தவகையில் இலங்கை நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பில், சாக்லேட்கள், வாசனை திரவியங்கள், ஒப்பனை மற்றும் ஷாம்பு உட்பட மொத்தம் 300 பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் ஆகஸ்ட் 22ம் திகதியிட்ட இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு விதிமுறைகளின் கீழ், உணவு முதல் இயந்திரம் வரையிலான இறக்குமதி தடை உடனடியாக அமலுக்கு வருவதாக தெரிவித்துள்ளது.
அத்துடன் பிற நாடுகளில் இருந்து ஆகஸ்ட் 23க்கு முன் அனுப்பப்பட்டு செப்டம்பர் 14ம் திகதிக்குள் நாட்டிற்கு வரும் பொருள்கள் அனுமதிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு: தாயை மார்பில் குத்திக் கொன்ற பிரித்தானியர்... 55 வயது பெண்ணிற்கு நேர்ந்த பரிதாபம்
இந்தநிலையில் இலங்கையின் மத்திய வங்கியின் ஆளுநர் நந்தலால் வீரசிங்க இந்த வருட இறுதிக்குள் சர்வதேச நாணய நிதியத்தின் வசதி கிடைக்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.