வெளிநாட்டில் இலங்கையருக்கு ஏற்பட்ட துயரம்: நடவடிக்கைக்கு ஆணையிட்ட ஜனாதிபதி
தென் கொரியாவில் இலங்கை புலம்பெயர்ந்த தொழிலாளி ஒருவர் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு அவமானப்படுத்தப்பட்ட சம்பவம் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அந்த நாட்டின் ஜனாதிபதி நடவடிக்கைக்கு ஆணையிட்டுள்ளார்.
நம்ப முடியவில்லை
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் துஷ்பிரயோகம் செய்யப்படுவதைத் தடுப்பதற்கான வழிகளைக் கண்டறியுமாறு தென் கொரிய ஜனாதிபதி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இலங்கையர் ஒருவர் சக தொழிலாளர்களால் சித்திரவதைக்கு உட்படுத்தப்படும் காணொளி வெளியாகி, பொதுமக்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், குறித்த காணொளியைப் பார்த்த பிறகு, என் கண்களையே என்னால் நம்ப முடியவில்லை என்று ஜனாதிபதி லீ ஜே மியுங் தமது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்திருந்தார்.
அது ஒரு சிறுபான்மை நபருக்கு எதிரான சகிக்க முடியாத அத்துமீறல் மற்றும் தெளிவான மனித உரிமை மீறலாகும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். பின்னர் நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில், லீ மீண்டும் அந்த துஷ்பிரயோக சம்பவத்தைக் கண்டித்து, தென் கொரியாவின் சர்வதேச பிம்பம் குறித்து தமது கவலைகளை பதிவு செய்துள்ளார்.
இதனையடுத்து, தென் கொரியாவில் புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் மற்றும் பிற சிறுபான்மையினர் எதிர்கொள்ளும் மனித உரிமை மீறல்களின் நிலையைத் தீர்மானிக்கவும், அத்தகைய துஷ்பிரயோகங்களைத் தடுப்பதற்கான யதார்த்தமான நடவடிக்கைகளைக் கண்டறியவும் அவர் அரசாங்க அமைச்சகங்களுக்கு உத்தரவிட்டார்.
இலங்கையர் தொடர்பான காணொளியை தென் கொரியாவின் மனித உரிமைகள் ஆர்வலர்களே வெளியிட்டிருந்தனர். கடந்த பிப்ரவரி பிற்பகுதியில் தென்மேற்கு நகரமான நஜுவில் உள்ள ஒரு செங்கல் தொழிற்சாலையில் குறித்த காணொளி படமாக்கப்பட்டுள்ளது.
வேலை தெரியவில்லை
சக இலங்கை தொழிலாளியால் படமாக்கப்பட்டு மனித உரிமைகள் ஆர்வலர்களிடம் வழங்கப்பட்டதாக அவர்கள் கூறியுள்ளனர். சித்திரவதைக்கு இலக்கான அந்த 31 வயது இலங்கையர் கடந்த ஆண்டு நவம்பரில் தென் கொரியாவில் பிழைப்புக்கு என சென்றுள்ளார்.
சுமார் 5 நிமிடங்கள் நீடிக்கும் அந்த காணொளியில், முறையாக வேலை தெரியவில்லை என்பதால் அந்த இலங்கையர் தென் கொரிய நபரால் தண்டிக்கப்படுகிறார். இதனிடையே, இந்த நிகழ்வு ஒரு குறும்புக்காக ஏற்பாடு செய்யப்பட்டதாக தொழிற்சாலையின் தலைவர் தங்களுக்குத் தெரிவித்ததாக நஜு நகர அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், ஒரு நபரை சித்திரவதை செய்வது குறும்பாக எடுத்துக்கொள்ள முடியாது என அந்த காணொளியை பொதுவெளியில் வெளியிட்ட மனித உரிமைகள் ஆர்வலர் ஒருவர் வாதிட்டுள்ளார்.
சம்பவம் நடந்த அந்த நிறுவனத்தில் தென் கொரியர்களுடன் கிழக்கு திமோர் மற்றும் இலங்கையைச் சேர்ந்த ஏழு பேர் உட்பட சுமார் 24 தொழிலாளர்கள் உள்ளனர். பாதிக்கப்பட்ட இலங்கையர் இன்னும் அந்த தொழிற்சாலையில் பணிபுரிவதாக நஜு நகர அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |