4 மாத கைக்குழந்தையுடன் தனுஷ்கோடி மணல்திட்டில் சிக்கித் தவித்த இலங்கை தமிழர்கள்..,
இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக, 4 மாத கைக்குழந்தையுடன் 6 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி வந்துள்ளனர்.
இலங்கையில் கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக, அத்தியவாசிய பொருட்களான அரிசி, பருப்பு, கோதுமை விலை ஏற்றம் மற்றும் மண்ணெண்ணெய், டீசல், பெட்ரோல் உள்ளிட்ட பொருட்களின் தட்டுப்பாடு அதிகரித்துள்ளது.
இதன் காரணமாக அங்கு வசிக்கும்மக்கள் உணவு, அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். இதனால் இலங்கையில் வாழும் தமிழர்கள் தமிழகத்திற்கு அகதிகளாக வர தொடங்கியுள்ளனர்.
இந்த நிலையில், செவ்வாய்க்கிழமையன்று அதிகாலை 4 மாத கைக்குழந்தையுடன் 6 இலங்கை தமிழர்கள் அகதிகளாக தனுஷ்கோடி வந்துள்ளனர்.
திங்கட்கிழமை இரவு மன்னார் மாவட்டம் பேச்சாலை கடற்கரையில் இருந்து மன்னாரை சேர்ந்த கஜேந்திரன், மேரிகிளாரி, நிசாத், கியூரி, எஸ்தர், மோசஸ் உள்ளிட்ட 6 பேர் நான்கு மாத கைக்குழந்தையுடன் பைபர் படகில் புறப்பட்டு செவ்வாக்கிழமை அதிகாலை சுமார் 1 மணி அளவில் தனுஷ்கோடி அடுத்துள்ள நான்காம் மணல்திட்டு பகுதியில் வந்து இறங்கினர்.
அப்பகுதியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் தகவல் கொடுத்ததையடுத்து, மணல் திட்டில் காலை முதல் குடிநீர் மற்றும் உணவு இல்லாமல் தவித்து வந்த ஆறு இலங்கைத் தமிழர்களை மீட்டு இந்திய கடலோர காவல் படையினர் மண்டபம் முகாமுக்கு அழைத்து வந்தனர்.
பாதுகாப்பு வட்டார அதிகாரிகளின் விசாரணைக்குப் பின் அனுமதி இன்றி தமிழகத்துக்குள் நுழைந்ததால் ஆறு இலங்கை தமிழர்கள் மீது மெரைன் பொலிஸார் ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Courtesy: BBCNewsTamil