இலங்கையில் வலுக்கும் மக்கள் போராட்டம்: அவசர நிலை பிரகடனம் அறிவித்த கோட்டாபய ராஜபக்ச
இலங்கையில் அரசுக்கு எதிராக போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில் அவசர நிலை பிரகடனத்தை அறிவித்தார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச.
இலங்கையில் விலைவாசி உயர்வு, மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு என பல வாரங்களாக கடுமையான பொருளாதார நெருக்கடியால் அவதிப்பட்டு வரும் மக்கள் அரசாங்கத்தை எதிர்த்து போராட்டங்களில் ஈடுபட்ட வந்த நிலையில், வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 2) அதிபர் கோட்டாபய ராஜபக்ச அவசர நிலை பிரகடனத்தை அறிவித்துள்ளார்.
இதனிடையே , அதிபர் கோட்டாபய ராஜபக்சவுக்கு ஆதரவு தெரிவித்திருந்த 11 கூட்டணி கட்சிகள் தங்கள் ஆதரவை விலக்கிக் கொள்வதாகவும், அங்கு ஆட்சியைக் கலைத்துவிட்டு ஒரு காபந்து அரசை அமைக்க வேண்டும் என்று அறிக்கையை வெளியிட்டனர். இந்த கோரிக்கையைத் தொடர்ந்து, அவசர நிலை பிரகடன அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தலைநகர் கொழும்பு மட்டுமின்றி, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பொருளாதார நெருக்கடி, தொடர் மின்வெட்டு, எரிபொருள் பற்றாக்குறை உள்ளிட்ட காரணங்களுக்காக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. வியாழக்கிழமை தொடங்கிய கொழும்பு நகரில் உள்ள அதிபர் கோட்டாபய ராஜபக்ச மாளிகை முன் ஏறத்தாழ 5,000 பேர் திரண்டனர்.
நாட்டின் பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க தவறியதற்காக அதிபர் ராஜபக்ச பதவி விலக வேண்டும் என்று கோஷங்கள் முழங்கி போராட்டம் நடத்தினர். இதனைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து கொழும்பு நகரில் வெள்ளிக்கிழமை காலை வரை ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது. மக்கள் போராட்டம் மீண்டும் நடைபெறாமல் இருக்க கொழும்பு நகர் முழுவதும் ராணுவம் குவிக்கப்பட்டிருந்தது.
இந்தியா, சீனா மற்றும் சர்வதேச நிதியத்தில் (IMF) கடனுதவிக் கேட்டுள்ள இலங்கையில் கடந்தாண்டு பொருளாதார அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. அதன்பின்னரும்கூட, அங்கு சூழ்நிலை மாறவில்லை.
இந்நிலையில் மக்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுவருவதால் அவசர நிலை பிரகடனத்தை அறிவித்தார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச.