இலங்கை பெண் பயணிக்கு இந்திய விமான நிலையத்தில் தொல்லை - அதிகாரி மீது வழக்குப்பதிவு
இலங்கையை சேர்ந்த பெண் பயணிக்கு, விமான நிலையத்தில் தொல்லை அளித்த அதிகாரி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இலங்கை பயணிக்கு தொல்லை
இலங்கையை சேர்ந்த 24 வயதான பெண், இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில், இசையில் இளங்கலை பட்டம் பயின்று வருகிறார்.
கடந்த ஆகஸ்ட் 3 ஆம் திகதி அவர் கொழும்பு விமான நிலையத்தில் இருந்து, இண்டிகோ விமானம் மூலம், மாலை 4:30 மணிக்கு ஹைதராபாத் விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார்.
அங்கிருந்து மற்றொரு விமானம் மூலம், அவர் சத்தீஸ்கரில் உள்ள ராய்ப்பூர் விமான நிலையத்திற்கு செல்ல 16 மணி நேரங்கள் காத்திருக்க வேண்டியிருந்துள்ளது.
அப்போது தனது உடமைகளை எடுத்து விட்டு, குடியேற்ற படிவத்தில் தகவல்களை நிரப்பி, அதை அங்கிருந்த குடியேற்ற கவுண்டரில் சமர்ப்பித்துள்ளார்.
வழக்குப்பதிவு
அப்போது அங்கிருந்த அதிகாரி ஒருவர், அவருடைய செல்போன் எண்ணை அளித்து உதவி தேவைப்பட்டால் தன்னை அழைக்குமாறு தெரிவித்துள்ளார்.
அதை தொடர்ந்து அந்த பெண்ணுக்கு அடிக்கடி அழைத்து, விமான நிலையத்தின் வாகன நிறுத்துமிடத்திற்கு வருமாறும், இரவு உணவுக்கு அழைத்து செல்கிறேன், நகரத்தை சுற்றி காட்டுகிறேன், என்னுடைய ஓய்வறைக்கு வா என தொடர்ந்து தொல்லை அளித்துள்ளார்.
இது குறித்து மாணவி தனது நண்பரிடம் தெரிவித்துள்ள நிலையில், விமான நிலையத்தில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளிக்குமாறு அறிவுறுத்தியுள்ளார்.
அதைத்தொடர்ந்து பெண் அளித்த புகாரின் அடிப்படையில் பின்தொடருதல் பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அந்த அதிகாரியை விசாரணைக்கு வருமாறும் நோட்டீஸ் அளித்துள்ளனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |