ஒரு கோடி மதிப்பிலான இரத்தின கற்களை வயிற்றுக்குள் கடத்தி வந்த இலங்கையர் கைது
கொழும்பிலிருந்து தமிழகத்திற்கு ரூ.1 கோடி மதிப்பிலான இரத்தின கற்களை விழுங்கி வயிற்றுக்குள் வைத்து கடத்திவந்த இலங்கையர் ஒருவர் சென்னை விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டார்.
இலங்கையின் கொழும்பு நகரத்திலிருந்து சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்த ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானத்தில், பெருமளவு கடத்தல் பொருட்கள் வருவதாக சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.
அதனைத் தொடர்ந்து, சுங்கத்துறை அதிகாரிகளின் தனிப்படை பிரிவினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்ட நிலையில் அந்த விமானத்தில் சுற்றுலா பயணிகள் விசாவில் வந்திருந்த இலங்கையைச் சேர்ந்த முகமது அன்சர் (24) என்பவரை சந்தேகத்தின் பேரில் விசாரித்துள்ளனர்.
கேட்ட கேள்விக்கு முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்ததால், மேலும் சந்தேகமடைந்த அதிகாரிகள், அவரை தனி அறைக்கு அழைத்துச் சென்று அதிகாரிகள் முழுமையாக பரிசோதித்துள்ளனர்.
தொடர்ந்து, சென்னை விமான நிலைய மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று எக்ஸ்ரே எடுத்து பரிசோதித்தபொது அவர் வயிற்றுக்குள் ஏதோ விழுங்கியுள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர், சென்னை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்று, இனிமா கொடுத்து அவர் வயிற்றுக்குள் இருந்து பல சிறிய பிளாஸ்டிக் பொட்டலங்களை வெளியே எடுத்தனர்.
அவற்றில் ஏகப்பட்ட இரத்தின கற்கள் இருந்துள்ளன. அவர் மொத்தம் 1,746 ரத்தின கற்களை விழுங்கி கடத்தி கொண்டு வந்திருந்துள்ளார். மொத்தம் 8309 காரட் எடை கொண்ட அந்த இரத்தின கற்கள் இந்தியாவில் சுமாா் ரூ. 1 கோடிக்கு மேல் என்று கூறப்படுகிறது.
இதையடுத்து சுங்க அதிகாரிகள் இலங்கை பயணியை கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.