இலங்கை இளைஞருக்கு மகிழ்ச்சியான செய்தி: வேலைவாய்ப்பு உறுதி அளித்த பிரதமர்
இலங்கையில் வேலை இல்லாமல் இருக்கும் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
இலங்கை இளைஞருக்கு மகிழ்ச்சியான செய்தி
இலங்கையில் வேலை இல்லாமல் இருக்கும் பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் நடவடிக்கையை எடுத்து வருவதாக அந்நாட்டின் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே 12,000க்கும் அதிகமான பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ள நிலையில், கொள்கைப் பிரகடனத்தில் குறிப்பிடப்பட்டுள்ளவாறே மற்றவர்களுக்கும் வேலை வாய்ப்புகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நாடாளுமன்றத்தில் இன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய இதனை குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக மேலும் குறிப்பிடுகையில், இலங்கையில் சுமார் 365,951 பேர் வேலையின்றி இருப்பதாகவும், 2024ம் ஆண்டின் முதல் காலாண்டில் 4.5ஆக இருந்த வேலையின்மை வீதம், 2025இல் 3.8 வரை வீழ்ச்சியடைந்து இருப்பதாக தெரிவித்துள்ளார்.

கல்வித் தகைமைகளுக்கு அமைய வேலையற்ற உள்ளவர்களின் எண்ணிக்கையில் க.பொ.த சாதாரண தரத்திற்கு கீழ் உள்ளவர்கள் 103,308 பேர்.
க.பொ.த சாதாரண தரத்தில் சித்தியடைந்தவர்கள் 91,405 பேர். க.பொ.த உயர்தரத்தில் சித்தியடைந்த 128,984 பேர் இவ்வாறு வேலையற்ற உள்ளனர். பட்டப்படிப்பு மற்றும் அதற்கு மேற்பட்ட கல்வித் தகைமைகளைக் கொண்ட 42,254 பேர் வேலையின்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர் என சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் ஆசிரியர் நியமனம் தொடர்பான வழக்குகள் தற்போது முடிவுக்கு வந்துள்ளது. மேன்முறையீட்டு நீதிமன்றினால் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்ட உடனேயே ஆட்சேர்ப்புப் பணிகள் ஆரம்பிக்கப்படும் என சுட்டிக்காட்டியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |