கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் தாய் பரபரப்பு குற்றச்சாட்டு
கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி காதலித்ததாக அவதூறு பரப்பப்படுவதாகவும், மகளின் மரணத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்றும் தாய் செல்வி கூறியுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கனியாமூர் கிராமத்தில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த 12ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி, உயிரிழந்த சம்பவத்தில் கலவரம் வெடித்தது. மாணவியின் மரணத்திற்கு நீதி வேண்டும் நூற்றுக்கணக்கானோர் பள்ளி முன் போராடினர்.
இந்த சம்பவம் தமிழகத்தையே உலுக்கியது. மாணவி தற்கொலை செய்துகொண்டதாகவும், அவர் எழுதிய கடிதம் கிடைத்தது எனவும் செய்தி வெளியானது. ஆனால் அந்த கடிதத்தில் உள்ள கையெழுத்து தனது மகளுடையது அல்ல என தாய் செல்வி கூறினார்.
அதனைத் தொடர்ந்து பூதாகரமாக வெடித்த இந்த விடயத்தில் இரண்டு ஆசிரியைகள் உட்பட பள்ளியின் நிர்வாகிகள் ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். மற்றோருபுறம் மாணவி ஸ்ரீமதி காதலித்ததாகவும், அதனால் தற்கொலை செய்துகொண்டதாகவும் தகவல் பரவியது.
இந்த நிலையில், தனது மகள் காதலித்ததாக அவதூறு பரப்புவதாக தாய் செல்வி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகையில், 'அவ்வளவு கடிதங்களில் எழுதுபவள் காதலித்திருந்தால் அவருடைய பெயரையும் எழுதியிருக்கலாமே. எல்லாமே சோடிக்கப்பட்ட பொய் தான். திசை திருப்புகிறார்கள். குற்றம் செய்த யாரும் தவறை ஒப்புக்கொள்ள மாட்டாங்க. அவங்க தப்பிக்க பல பொய்களை சொல்கிறார்கள். நியாயமான கேள்விகளுக்கே உண்மையை கூறவில்லை.
அப்படியிருக்க என் மகள் மீது அபாண்டமாக பழி சுமத்துவதை யாரிடம் போய் கூறுவது. நாங்கள் கலவரம் பண்ணவோ, பிரச்சனை பண்ணவோ நினைத்திருந்தால், அவள் இறந்த முதல் நாளே சந்தேகம் வந்து பண்ணியிருக்கலாம். நாங்கள் அதை செய்யவில்லை. கொலையோ, தற்கொலை அது எப்படி நிகழ்ந்தது என்பதை அறியவே அமைதியான முறையில் முதல் நாளே கேட்டோம்.
பின் இரண்டாவது நாள் என நான்கு நாட்கள் அமைதியாக தான் கேட்டோம். வன்முறையை தூண்டும் வகையில் ஒருமுறை கூட நடந்ததில்லை. இந்த கூட்டம் நான்கு நாட்களாகியும் அமைதியான முறையில் போராடுகிறார்களே என்று நினைத்து, பள்ளி நிர்வாகமே தான் வன்முறையை செய்தது. ஸ்ரீமதியின் கொலுசு, தோடு எங்க இருக்குன்னே தெரியாதாம். செயின் பிஞ்சுதான் இருந்ததாம்.
செயின் எப்படி அறுந்துவிழும்?, இந்த ஸ்ரீமதிக்கு நடந்தது வேறு யாருக்கும் நடக்கக்கூடாது என்று தான் நான் தவிக்கிறேன். உடலை வைத்து எந்த பேரமும் பேசவில்லை, நியாயத்தை தான் கேட்கிறேன். இது ஒரு தப்பா?,
அதே போல் சிபிசிஐடி-யை நான் கடவுளாக பார்க்கிறேன். அவங்க மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிச்சத்திற்கு
கொண்டுவருவார்கள் என்று நான் நூற்றுக்கு நூறு நம்புகிறேன்.
அப்படி இல்லாமல் பாதி உண்மைகள் மறைக்கப்பட்டால் நான் சிபிஐ-க்கு கூட செல்வேன்' என தெரிவித்துள்ளார்.