ஒலிம்பிக் வீரரை காதல் திருமணம் செய்ய உள்ள ஆப்பிள் நிறுவனர் மகள் - யார் இந்த ஈவ் ஜாப்ஸ்?
ஆப்பிள் நிறுவனம், உலகளவில் மதிப்புமிக்க நிறுவனங்களில் ஒன்றாக உள்ளது. அதன் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் கடந்த 2011 ஆம் ஆண்டு காலமானார்.
ஸ்டீவ் ஜாப்ஸ் மகள் திருமணம்
இந்நிலையில், அவரது மகள் ஈவ் ஜாப்ஸ் இந்த வாரம், 6.7 மில்லியன் டொலர்(இந்திய மதிப்பில் ரூ.57.85 கோடி) மதிப்பில் பிரம்மாண்ட திருமணம் செய்ய உள்ளார்.
ஈவ் ஜாப்ஸ், குதிரையேற்ற வீரரும், ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்றவருமான ஹரி சார்லஸ் என்பவரை காதலித்து வந்தார். ஈவ் ஜாப்ஸ், தனது வருங்கால கணவர் ஹரி சார்லஸை விட ஒரு வயது மூத்தவர் ஆவார்.
இவர்களின் திருமணத்தில், கமலா ஹாரிஸ் உள்ளிட்ட பல முக்கிய பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என தகவல் வெளியாகியுள்ளது.
யார் இந்த ஈவ் ஜாப்ஸ்?
27 வயதான ஈவ் ஜாப்ஸ், ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றுள்ளார். அவர் விளையாட்டு துறையில், குறிப்பாக குதிரையேற்றத்தில் ஆர்வம் உள்ளவராக இருக்கிறார்.
6 வயதில் குதிரை சவாரி செய்யத் தொடங்கிய ஈவ், தனது தாய் வாங்கிய 15 மில்லியன் டொலர் மதிப்புள்ள குதிரையேற்றத் தோட்டத்தில் பயிற்சி பெறுகிறார். 2019 ஆம் ஆண்டில், 25 வயதுக்குட்பட்ட உலகின் 5வது சிறந்த குதிரை வீரராக அவர் தரவரிசைப்படுத்தப்பட்டார்.
அது மட்டும் மட்டுமன்றி, பேஷன் துறையிலும் இவருக்கு ஆர்வம் உள்ளது. சமீபத்தில் நடைபெற்ற பாரிஸ் பேஷன் நிகழ்ச்சிகளில் அவர் கலந்து கொண்டார். மேலும், மாடலான அவர் லூயிஸ் உய்ட்டன் உள்ளிட்ட பல புகழ்பெற்ற பிராண்டுகளுடன் பணிபுரிந்தவர்.
ஈவ் ஜாப்ஸின் சொத்து மதிப்பு, 5 லட்சம் டொலர் முதல் 1 மில்லியன் டொலர் வரை இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
அவரின் தாயார் 21.7 பில்லியன் டாலர் சொத்துக்களைக் வைத்திருந்தாலும், இது ஈவ்க்கு செல்லாது என கூறியுள்ளார். அதாவது ஈவ் ஜாப்ஸ் தனக்கு தேவையான செல்வதை தானே சம்பாதித்து கொள்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |