இஸ்ரேல் தொடர்பில் அமெரிக்காவை கெஞ்சும் வளைகுடா நாடுகள்: ஒரேயொரு காரணம்
ஈரானின் எண்ணெய் வயல்கள் மீது தாக்குதல் நடத்தும் இஸ்ரேலின் திட்டத்தை தடுத்து நிறுத்த வேண்டும் என அமெரிக்காவை வளைகுடா நாடுகள் வலியுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இஸ்ரேல் விமானங்கள் பறக்க மறுப்பு
ஈரான் - இஸ்ரேல் மோதல் போக்கு தீவிரமடைந்தால், ஈரானின் கூட்டாளிகள் தங்கள் எண்ணெய் வயல்கள் மீது தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சத்தில் வளைகுடா நாடுகள் அமெரிக்காவை கெஞ்சியுள்ளது.
மட்டுமின்றி, இஸ்ரேல் மற்றும் ஈரான் மோதலுக்கு இடையில் தாங்கள் சிக்கிக்கொள்ளாமல் இருக்க, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் கத்தார் உள்ளிட்ட நாடுகள் தங்கள் வான்பரப்பில் இஸ்ரேல் விமானங்கள் பறக்க மறுப்பு தெரிவித்துள்ளது.
கடந்த வாரம் ஈரான் முன்னெடுத்த ஏவுகணை தாக்குதலுக்கு பதிலடி உறுதி என்றே இஸ்ரேல் கூறி வருகிறது. இஸ்ரேல் ராணுவத்தின் பதிலடி உக்கிரமாகவும் துல்லியமாகவும் இருக்கும் என்று இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் மிரட்டல் விடுத்துள்ளார்.
இந்த நிலையிலேயே, ஈரானின் எண்ணெய் வயல்கள் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் வளைகுடா நாடுகளுக்கு எழுந்தது.
மட்டுமின்றி, ஈரான் மீதான தாக்குதலுக்கு சவுதி அரேபியா ஏதேனும் உதவிகள் முன்னெடுத்தால், சவுதி அரேபியாவின் எண்ணெய் வயல்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க முடியாது என ஈரான் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதனிடையே, வளைகுடா நாடுகள் தங்கள் வான்பரப்பை இஸ்ரேல் பயன்படுத்த அனுமதித்தால், அது போரில் முடியும் என்பது உறுதி என தெரிவித்துள்ளார் சவுதி அரேபிய ஆய்வாளர் ஒருவர்.
இஸ்ரேல் நடவடிக்கையால் சவுதி அரேபியா அல்லது ஐக்கிய அமீரக எண்ணெய் வயல்கள் ஈரானால் தாக்கப்பட்டால், உலகம் எண்ணெய் விநியோக சிக்கலை எதிர்கொள்ளும்.
ஈரான் தற்போதும் மறுத்து வருகிறது
2019ல் சவுதி அரேபியாவின் அராம்கோ எண்ணெய் வயல் மீது தாக்குதல் நடத்தியதில் இருந்து அதன் எண்ணெய் ஆலைகள் மீது ஈரானிய தாக்குதல் குறித்து எச்சரிக்கையாக உள்ளது.
மட்டுமின்றி, அப்போது உலக அளவிலான எண்ணெய் விநியோகத்தில் 5 சதவிகிதம் தடைபட்டது. குறித்த தாக்குதலை ஈரான் தற்போதும் மறுத்து வருகிறது. சவுதி அரேபியா சமீபத்திய ஆண்டுகளில் ஈரானுடன் ஒரு நல்லுறவைக் கொண்டிருக்கிறது, ஆனால் நம்பிக்கை ஒரு பிரச்சினையாகவே உள்ளது.
மட்டுமின்றி, பஹ்ரைன், குவைத், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அமீரகம் உள்ளிட்ட நாடுகள் அனைத்தும் அமெரிக்க ராணுவம் தளம் அல்லது ராணுவத்தினருக்கு வாய்ப்பளித்து வருகிறது.
வெளியான தகவலின் அடிப்படையில் இஸ்ரேல் ஜோர்தான் அல்லது ஈராக் வழியாக ஈரான் மீது தாக்குதல் நடத்தலாம். ஆனால் சவுதி, ஐக்கிய அமீரகம் அல்லது கத்தார் வான்வெளியைப் பயன்படுத்துவதன் தேவை இருக்காது என்றே கூறப்படுகிறது.
புதன்கிழமை வரையில், ஈரான் மீதான தாக்குதல் தொடர்பில் இஸ்ரேல் முடிவெடுக்கவில்லை என்றே தகவல் வெளியாகியுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |