இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் அளிப்பதை நிறுத்துங்கள்... ஐரோப்பிய நாடொன்றின் பிரதமர் ஆவேசம்
சர்வதேச நாடுகள் இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்வதை நிறுத்த வேண்டும் என ஸ்பெயின் நாட்டின் பிரதமர் Pedro Sanchez வலியுறுத்தியுள்ளார்.
இஸ்ரேல் படைகள் தாக்குதல்
லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகளின் அமைதி காக்கும் படைக்கு எதிராக இஸ்ரேலின் ஆயுதப் படைகள் நடத்திய தாக்குதல்களை அவர் வன்மையாக கண்டித்துள்ளார்.
தெற்கு லெபனானில் ஐ.நா அமைதி காக்கும் படையினரால் பயன்படுத்தப்பட்ட கண்காணிப்பு நிலையத்தின் மீது இஸ்ரேலியப் படைகள் வெள்ளிக்கிழமை துப்பாக்கிச் சூடு நடத்தியது. குறித்த தாக்குதலில் இருவர் காயங்களுடன் தப்பியுள்ளதாக ஐ.நா தரப்பு தெரிவித்துள்ளது.
தொடர்ந்து மூன்றாவது நாளாக இஸ்ரேல் படைகள் தாக்குதல் தொடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது. ஹிஸ்புல்லா மீது இஸ்ரேல் போர் தொடுக்கும் நிலையில் அமைதி காக்கும் படையினர் மீது இஸ்ரேலிய ராணுவம் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தெரிவித்துள்ளனர்.
ஆனால் ஐ.நா அமைதிப்படையில் பணியாற்றும் ஸ்பானிய வீரர்கள் எவரும் தாக்குதலில் சிக்கவில்லை என அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஸ்பெயின் மட்டும் 650 வீரர்களை ஐ.நா அமைதி காக்கும் படையில் லெபனானில் நிலைநிறுத்தியுள்ளது.
அதுவே உறுதியான தீர்வு
குறித்த படையினரை ஸ்பெயின் தளபதி ஒருவர் வழிநடத்துகிறார். லெபனானில் உள்ள ஐக்கிய நாடுகள் சபையின் செயல்பாடுகளின் மீது இஸ்ரேலிய ஆயுதப்படைகள் நடத்தும் தாக்குதல்களை கடுமையாக விமர்சித்து கண்டிப்பதாக பிரதமர் Pedro Sanchez தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் மோதல் போக்கை உருவாக்கிவரும் இஸ்ரேலின் நடவடிக்கைகள் மீது சமீப நாட்களில் கடும் அதிருப்தி தெரிவித்து வருகிறார் ஸ்பெயின் பிரதமர் Pedro Sanchez.
அக்டோபர் 2023ல் இருந்தே இஸ்ரேலுக்கு ஆயுதங்கள் விற்பனை செய்வதை ஸ்பெயின் துணிச்சலுடன் நிறுத்தியுள்ளதாக தெரிவித்துள்ள அவர், சர்வதேச நாடுகளும் துணிந்து முடிவெடுக்க வேண்டும் என்றும், மத்திய கிழக்கில் அமைதி திரும்ப அதுவே உறுதியான தீர்வு என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |