போப் பிரான்சிஸ் புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர் என்பது உங்களுக்குத் தெரியுமா?
போப் பிரான்சிஸ் உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்த நிலையில், இன்று அவரது இறுதிச்சடங்கு நடைபெற உள்ளது.
இந்நிலையில், அவரைக் குறித்து பலருக்கும் தெரியாத பல தகவல்கள் வெளியாகிவருகின்றன.
புலம்பெயர்தல் பின்னணி...
போப் பிரான்சிஸ் புலம்பெயர்தல் பின்னணி கொண்டவர் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?
ஆம், போப் பிரான்சிஸ், மரியோ ஜோஸ் பெர்காக்லியோ என்பவருக்கும் ரெஜினா மரியா சிவோரி என்பவருக்கும் பிறந்தவர்.
போப் பிரான்சிஸின் தந்தையான மரியோ இத்தாலி நாட்டவர். 1929ஆம் ஆண்டு சர்வாதிகாரி முசோலினியின் கொடுங்கோலாட்சிக்குத் தப்ப மரியோவின் குடும்பம் இத்தாலியிலிருந்து அர்ஜென்டினாவுக்கு புலம்பெயர்ந்தது.
நீங்கள் தனிமையாக இல்லை...
2016ஆம் ஆண்டு, ஐரோப்பிய புலம்பெயர்தல் நெருக்கடியின்போது, சிரியா, ஈராக், ஆப்கானிஸ்தான் மற்றும் எரித்ரியா போன்ற நாடுகளிலிருந்து தப்பியோடிய நூற்றுக்கணக்கான மக்கள் ஐரோப்பிய ஒன்றியத்தில் புகலிடம் கோரியுள்ளார்கள்.
அப்போது, அவர்கள் தங்கியிருந்த கிரீக் தீவான லெஸ்போஸுக்கு நேரடியாகவே சென்றுள்ளார் போப் பிரான்சிஸ்.
நீங்கள் தனிமையாக இல்லை, நம்பிக்கை இழக்காதீர்கள் என அவர்களுக்கு ஆறுதல் கூறியுள்ளார் போப் பிரான்சிஸ்.
அடுத்து அவர் செய்த விடயத்தை, சம்பந்தப்பட்டவர்கள் உடலில் உயிர் இருக்கும்வரை மறக்கமாட்டார்கள்.
ஆம், அன்று மாலை இத்தாலிக்குத் திரும்பும்போது, அந்த புலம்பெயர்ந்தோரில் 12 பேரை தன்னுடன் தனது விமானத்தில் ஏற்றிக்கொண்டு வந்துள்ளார் போப் பிரான்சிஸ்.
இப்போது இத்தாலியில் வாழ்கிறார்கள் அவர்கள் அனைவரும். எந்த நாட்டுக்கு நாடுகடத்தப்படுவோமோ என்ற பயத்தில் இருந்தவர்கள், இன்று வேலை, பிள்ளைகளுக்கு படிப்பு என நிம்மதியாக வாழக் காரணம் போப் பிரான்சிஸ்தான் என்கிறார்கள்.
பிலிப்பைன்சிலிருந்து புலம்பெயர்ந்த Diane Karla Abano என்னும் பெண், தன் பிள்ளைகள் இருவரையும் போப் முத்தமிடும் புகைப்படங்களுடனும், மலரும் நினைவுகளுடனும் அவரது இறுதிச்சடங்குக்கான சென்றுகொண்டிருக்கிறார்.
கருப்பினத்தவரான Cedric Musau Kasongo என்பவர், நாங்களெல்லாம் பொதுவாக யார் கண்ணுக்கும் தெரியமாட்டோம். ஆனால், ஆனால், என்னையும் அவர் கரம்பிடித்து, என்னை வாழ்த்தியதை என்னால் மறக்கமுடியாது. கடைசி வரை அந்தக் காட்சி என்னுடன் இருக்கும் என்கிறார்.
இப்படி ஏராளம் புலம்பெயர்ந்தோர் போப் பிரான்சிஸை போப்பாக மட்டும் அல்ல, தங்களில் ஒருவராக, கருதுகிறார்கள்.
நேரடி மோதல்...
வெறும் வார்த்தைகளுடன் நிற்காமல் செயலில் இறங்கும் குணம் கொண்டவரான போப் பிரான்சிஸ், 2016ஆம் ஆண்டில் வெளிப்படையாகவே ட்ரம்புடன் மோதினார்.
புலம்பெயர்வோரை தடுத்து நிறுத்துவர்தற்காக அமெரிக்க மெக்சிகோ எல்லையில் ட்ரம்ப் சுவர் எழுப்ப திட்டமிட்டபோது, பாலங்கள் கட்டாமல் சுவர் எழுப்பும் ஒருவர் கிறிஸ்தவராக இருக்கமுடியாது என வெளிப்படையாகவே ட்ரம்பை விமர்சித்தார் போப் பிரான்சிஸ்.
இன்று போப் பிரான்சிஸின் உடல் நல்லடக்கம் செய்யப்படும் நிலையில், அவரது இறுதிச்சடங்கில் ட்ரம்ப் உட்பட உலகத் தலைவர்கள் பலர் கலந்துகொள்கிறார்கள்.
ஆனால், உண்மையான அன்புடன் ஏராளம் புலம்பெயர்ந்தோர் தங்களுக்கு இறுதிச்சடங்கில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் கூட, தங்கள் உயிர் இருக்கும்வரை போப் பிரான்சிஸை மனதார வாழ்த்துவார்கள், நினைவுகூருவார்கள், அவருக்காக பிரார்த்தனை செய்வார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |