தண்ணீர் என நினைத்து ஆசிட்டை குடித்த மாணவர்! அதிர்ச்சி பின்னணி
இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் கல்லூரி மாணவர் ஒருவர் தண்ணீருக்குப் பதிலாக ஆசிட் குடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஆந்திர மாநிலம் கிருஷ்ணா மாவட்டத்தைச் சேர்ந்த சைதன்யா (21) என்ற இளைஞர், விஜயவாடாவில் உள்ள கல்லூரி ஒன்றில் 3ஆம் ஆண்டு படித்து வருகிறார்.
நேற்றைய தினம் தனது கல்லூரிக்கு அருகில் இருக்கும் கடைக்கு சென்ற அவர், குடிப்பதற்கு தண்ணீர் போத்தல் கேட்டுள்ளார். அதற்கு குளிர்சாதன பெட்டியில் இருந்து எடுத்து கொள்ளுமாறு கடை உரிமையாளர் தெரிவிக்க, சைதன்யாவும் உள்ளே இருந்து தண்ணீர் போத்தலை எடுத்து குடித்தார்.
ஆனால் போத்தலில் இருந்தது ஆசிட் என்பது அவர் அருந்தியதும் தான் தெரிந்தது. இதனால் வாய், குடல் முழுவதும் வெந்தது. வலியால் அலறித் துடித்த மாணவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த பொலிசார் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் கடை உரிமையாளரிடம் விசாரித்தபோது, குளிர்சாதன பெட்டியில் தண்ணீர் போத்தல் அருகே ஊற்றி வைக்கப்பட்டிருந்த ஆசிட்டை தெரியாமல் மாணவன் எடுத்து குடித்ததாக கூறினார்.
இச்சம்பவம் குறித்து அறிந்த கல்லூரியை சேர்ந்த சக மாணவர்கள் கடை உரிமையாளரை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர்.