இனிமேல் பொறுக்க முடியாது! கிராம சபையில் ஆவேசமாக பேசிய 8 ஆம் வகுப்பு மாணவன்
தமிழகத்தில் உள்ள திருநெல்வேலி மாவட்டத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர் ஒருவர் சுத்தமான குடிநீர் வழங்கவில்லை என ஆவேசமாக பேசியது வைரலாகி வருகிறது.
சுத்தமான குடிநீர் இல்லை
திருநெல்வேலி மாவட்டம், கங்கைகொண்டான் பகுதியில் சுதந்திர தினத்தன்று ஊராட்சி தலைவர் கவிதா தலைமையில் கிராமசபை கூட்டம் நடைபெற்றது.
அப்போது, அந்த கூட்டத்தில் கங்கைகொண்டான் அரசு பள்ளியில் படிக்கும் 8 ஆம் வகுப்பு மாணவர் குமாரவேல் பேசினார். அந்த மாணவர்," நாங்கள் வசித்துக் கொண்டிருக்கும் கங்கைகொண்டான் பகுதிக்கு அருகே அரசினுடைய சிப்காட் தொழிற்சாலை அமைந்துள்ளது.
அங்கிருந்து திறந்துவிடப்படும் கழிவுநீர் எங்களது குடியிருப்பு பகுதிக்கு வந்து குடிநீரை மாசுபடுத்துகிறது" என்று கூறினார்.
குடிநீர் குடித்ததால் டைபாய்டு காய்ச்சல்
மேலும் பேசிய குமாரவேல்,"மாசுபட்ட குடிநீரை குடிப்பதால் பல்வேறு நோய்கள் ஏற்படுகிறது. எனக்கும், என் தந்தை, சகோதரன், நண்பர்கள் ஆகியோருக்கு உடல்நிலை சரியில்லாமல் டைபாய்டு காய்ச்சல் வந்தது. சுத்தமான குடிநீரை வழங்குவது உள்ளாட்சி அமைப்பின் கடமை. கேன் தண்ணீர் குடித்தால் அதில் சத்து கிடையாது. இனிமேலும் பொறுத்துக் கொள்ள முடியாது" என்று பேசினார்.
இதற்கு, கிராமசபையில் இருந்தவர்கள் கை தட்டி ஆரவாரப்படுத்தினர். அதுமட்டுமல்லாமல், குடிநீர் பிரச்சனையை தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊராட்சித் தலைவர் கூறினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |