உள்நாட்டு போரில் பலியானோர் எண்ணிக்கை 528 ஆக உயர்வு!
சூடானில் நடந்து வரும் உள்நாட்டு போரில் இதுவரை 528 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும், 4,599 பேர் காயமடைந்துள்ளனர் என்றும் அறிக்கை வெளியாகியுள்ளது.
உள்நாட்டு போர்
ஆப்பிரிக்க நாடான சூடானில் இராணுவத்திற்கும், துணை இராணுவப் படைகளுக்கும் இடையே நடந்து வரும் போரில் ஏராளமான மக்கள் பலியாகி வருகின்றனர்.
அந்நாட்டில் சிக்கியுள்ள பல்வேறு தேசங்களைச் சேர்ந்த மக்களை அழைத்து வரும் முயற்சிகள் நடந்து வருகிறது. குறிப்பாக பிரித்தானியா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்கள் குடிமக்களை அங்கிருந்து மீட்கும் பணியில் தீவிரம் காட்டி வருகின்றன.
பலி எண்ணிக்கை உயர்வு
இந்த நிலையில் சூடான் சுகாதார அமைச்சகம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் பயங்கர மோதல்களில் குறைந்தது 528 பேர் கொல்லப்பட்டுள்ளனர் மற்றும் 4,599 பேர் காயமடைந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், போர் நிறுத்தத்தின் நீட்டிப்பு மேற்கு டார்பூர் மற்றும் தலைநகர் கார்ட்டூம் தவிர, நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் அமைதியைக் கொண்டு வந்ததாகவும் கூறப்பட்டுள்ளது.
அத்துடன், 'கார்டோமில் உள்ள சுகாதார சேவை மையங்களின் எண்ணிக்கை விரிவுபடுத்தப்பட்டுள்ளது மற்றும் மருத்துவமங்களுடனான தொடர்பு மேம்படுத்தப்பட்டுள்ளது' எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Image: PO Phot Arron Hoare/UK Ministry of Defence via AP
மருந்துப் பொருட்களின் தேவை
இதற்கிடையில், நட்பு நாடுகள் மற்றும் சர்வதேச, பிராந்திய அமைப்புகளைச் சேர்ந்த பல நாடுகளுடன் அவசர தேவை உள்ள மக்களுக்கு மருத்துவப் பொருட்களை வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பல்லாயிரக்கணக்கான சூடானியர்கள் பாதுகாப்பிற்காக வேறு நாடுகளுக்கு புலம்பெயர்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Image: AP Photo/Marwan Ali, File