சூடான் பஞ்சம் குறித்து 31 நாடுகள் அவசர எச்சரிக்கை
Sudan Famine Warning by 31 Nations: சூடான் பஞ்சம் குறித்து பிரித்தானியா உள்ளிட்ட 31 நாடுகள் அவசர எச்சரிக்கை விடுத்துள்ளன.
31 நாடுகள் இணைந்து எச்சரிக்கை
சூடானில் நடைபெற்று வரும் உள்நாட்டுப் போரின் காரணமாக, அந்நாட்டில் பஞ்சம் ஏற்படும் நிலைமை உருவாகி வருவதாக அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட 31 நாடுகள் இணைந்து எச்சரிக்கை விடுத்துள்ளன.

அமெரிக்க வெளியுறவு துறை வெளியிட்ட கூட்டு அறிக்கையில், சூடானில் 40 சதவீத மக்கள் தொகை (சுமார் 19.5 மில்லியன் பேர்) கடுமையான உணவுக் குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 5 மில்லியன் பேர் அவசரகால நிலையை அனுபவித்த வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
2023 ஏப்ரல் மாதம் தொடங்கிய சூடானிய ஆயுதப்படைகள் மற்றும் Rapid Support Forces இடையேயான போரில் இதுவரை 2 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1.3 கோடி மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர். இது உலகின் மிகப்பெரிய பசி மற்றும் இடம்பெயர்வு நெருக்கடி என உதவி அமைப்புகள் தெரிவித்துள்ளன.
அறிக்கையில், “அடுத்த சில மாதங்களில் பசி பஞ்சம் ஏற்படும் அபாயம் மிகுந்துள்ளது. உயிர்களை காப்பாற்ற உடனடி நடவடிக்கை அவசியம்” என வலியுறுத்தப்பட்டுள்ளது. மேலும், 8.25 லட்சம் குழந்தைகள் கடுமையான ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்படலாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
உணவுக் குறைபாடு நிலவும் பகுதிகள் இரட்டிப்பாக அதிகரிக்கும் அபாயமும் உள்ளது. இந்த 31 நாடுகள், சூடானில் போராடும் தரப்புகள் மனிதாபிமான உதவிகளைத் தடுக்கும் அனைத்து தடைகளையும் நீக்க வேண்டும் என்றும், உதவி பணியாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளன.
31 நாடுகள் கையெழுத்து
அமெரிக்கா வெளியிட்ட இந்த அறிக்கையில் அவுஸ்திரேலியா, ஆஸ்திரியா, பெல்ஜியம், பல்கேரியா, கனடா, குரோஷியா, சைப்ரஸ், செக் குடியரசு, டென்மார்க், எஸ்தோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜேர்மனி, அயர்லாந்து, இத்தாலி, ஹங்கேரி, லாட்வியா, லக்சம்பர்க், மால்டா, நெதர்லாந்து, நோர்வே, போலந்து, போர்ச்சுகல், ருமேனியா, ஸ்லோவாக்கியா, ஸ்லோவேனியா, ஸ்பெயின், ஸ்வீடன், சுவிட்சர்லாந்து மற்றும் பிரித்தானியா ஆகிய நாடுகளின் அரசாங்கங்கள் இணைந்து கையெழுத்திட்டன.
சூடானில் போர் நான்காவது ஆண்டில் நுழைந்துள்ள நிலையில், சர்வதேச சமூகத்தின் கவனத்திற்கு வராமல் போன மறக்கப்பட்ட நெருக்கடி என அதிகாரிகள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |