சூடானில் சந்தையில் நடந்த பயங்கர தாக்குதல்: டஜன் கணக்கானோர் உயிரிழப்பு
சூடான் சந்தையில் நடந்த பயங்கரமான தாக்குதலில் டஜன் கணக்கானோர் கொல்லப்பட்டு இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சூடானின் ஓம்டுர்மன்(Omdurman) நகரில் உள்ள ஒரு பரபரப்பான சந்தையில் நடந்த கோரமான தாக்குதலில், குறைந்தது 54 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 158க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளனர்.
ராபிட் சப்போர்ட் ஃபோர்சஸ் (RSF) நடத்திய இந்த தாக்குதல், நாட்டில் நடந்து வரும் கொடூரமான உள்நாட்டுப் போரை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.
அரசாங்க செய்தித் தொடர்பாளர் மற்றும் கலாச்சார அமைச்சர் காலித் அல் அலெயிசிர் இந்த வன்முறையை கடுமையாகக் கண்டித்துள்ளார்.
மேலும் அறிக்கையில், இந்த தாக்குதலை "குற்றவியல் செயல்" மற்றும் "சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் அப்பட்டமான மீறல்" என்று சாடியுள்ளார்.
சந்தைத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களை ஏற்றிச் செல்லப்பட்ட அல் நவ் மருத்துவமனைக்கு அருகில் ஒரு மோட்டார் குண்டு வீசப்பட்டதாக சூடான் டாக்டர்ஸ் சிண்டிகேட் தெரிவித்துள்ளது.
மருத்துவமனையில் மருத்துவ பணியாளர்கள், குறிப்பாக அறுவை சிகிச்சை நிபுணர்கள் மற்றும் செவிலியர்கள் பற்றாக்குறை நிலவுவதாக கூறப்படுகிறது.
சமூக ஊடகங்களில் பரவி வரும் அதிர்ச்சியூட்டும் காட்சிகள், மருத்துவமனைக்கு வெளியே சடலங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருப்பதையும், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதையும், சிலர் மருத்துவமனை தரையிலேயே சிகிச்சை பெறுவதையும் காட்டுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |