மலை முகட்டில் மோதி விபத்துக்குளான ரஷ்ய விமானம்! பயணித்த அனைவரும் பலி?
ரஷ்யாவில் நேற்று திடீரென பயணிகள் விமானம் ஒன்று மாயமான நிலையில், மலை முகட்டில் மோதி விபத்துக்குள்ளானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷ்யாவில் 22 பயணிகள், ஆறு விமான ஊழியர்களுடன் பயணித்துக்கொண்டிருந்த விமானம் ஒன்று, உள்ளூர் நேரப்படி 3 மணியளவில் கட்டுப்பாட்டு அறையுடனான தொடர்பை இழந்துள்ளது.
பின்னர், விமானத்தின் பாகங்கள் விமான ஓடுதளத்திலிருந்து சற்று தொலைவிலும், கடலிலும் கண்டுபிடிக்கப்பட்டன.
ஆனால் உடல்கள் எதுவும் கிடைக்கவில்லை. ஒரு குழந்தை உட்பட மொத்தம் 28 பேர், பெரும்பாலும் ரஷ்யர்கள் அந்த விமானத்தில் பயணித்த நிலையில், அனைவருமே உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
விபத்துக்கான காரணம் தெரியாத நிலையில், பனிமூட்டம் காரணமாக ஓடுபாதை தெரியாமல் இருந்திருக்கலாம் என்ற ஒரு கருத்து நிலவுகிறது
இதற்கிடையில், என்ன நடந்தது என இப்போதைக்கு கூறுவது கடினம் என்று கூறியுள்ள பாதுகாப்பு அதிகாரிகள், நிபுணர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட பிறகே உறுதியான தகவல்கள் வெளியாகும் என்று கூறியுள்ளனர்.
மலை முகட்டில் மோதி விபத்து
மாயமான விமானம் மோசமான வானிலையின் காரணமாக மலை முகட்டில் மோதி விபத்துக்குள்ளானதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் கம்சாட்கா ஆளுநர் விளாதிமிர் சொலோடோவ் தெரிவித்திருப்பதாவது, கடற்படை மற்றும் ராணுவ விமானங்கள் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபடுத்தப்பட்டன.
அதன் பயனாக விபத்துக்குள்ளான விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
பலானா நகரத்தில் இருந்து வடக்கில் 5 மீட்டர் தூரத்தில் விமான பாகங்கள் கிடக்கின்றன. சில பாகங்கள் அங்குள்ள கடற்கரைகளிலும் காணப்படுகின்றன என்று தெரிவித்தார்.
இந்நிலையில் விமானத்தில் பயணித்த அனைவரும் பலியாகி இருக்கலாம் என்றும், அவர்களது சடலங்களை தேடும் பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.