இரத்தமும் சதையுமாக... காபூல் விமான நிலையத்தில் ஐ.எஸ் கொடுஞ்செயல்: எகிறும் பலி எண்ணிக்கை
ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்தில் இரட்டை வெடிகுண்டு தாக்குதலை முன்னெடுத்தது ஐ.எஸ் தீவிரவாதிகள் என்ற தகவலை தாலிபான்கள் வெளியிட்டுள்ளனர்.
இதுவரை சிறார்கள் உள்ளிட்ட 60 பேர்கள் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 140கும் மேற்பட்ட மக்கள் காயங்களுடன் தப்பியுள்ளனர்.
குறித்த தாக்குதலில் 13 அமெரிக்க ராணுவ வீரர்களும் தாலிபான்களில் பலரும் கொல்லப்பட்டதாக உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, காபூல் நகரை மொத்தமாக உலுக்கிய இரட்டை வெடிகுண்டு தாக்குதல் சம்பவத்தில் பிரித்தானிய ராணுவத்தினர் அல்லது குடிமக்கள் எவரும் சிக்கவில்லை என அந்த நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் உறுதி செய்துள்ளது.
மேலும், குறித்த தாக்குதல் சம்பவத்தில் ஐ.எஸ் தீவிரவாத அமைப்புக்கு தொடர்பு இருப்பது குறித்து பிரித்தானியா உறுதிப்படுத்தவும் இல்லை, மறுக்கவும் இல்லை. ஆனால், அமெரிக்க தரப்பு அதிகாரிகள் சிலர் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஐ.எஸ் தொடர்பு இருக்க வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பிரித்தானிய துருப்புகள் மொத்தமும் பாதுகாப்பு நிலையில் நிறுத்தப்பட்டிருந்ததாகவும், பிரித்தானிய குடிமக்கள், ராணுவத்தினரல்லாத அதிகாரிகள் தரப்பு ஆகியோர் பதுங்கு குழிகளில் தஞ்சம் புகுந்ததாகவும் தெரிய வந்துள்ளது.
மட்டுமின்றி, தாக்குதல் சம்பவங்கள் மேலும் தொடர வாய்ப்பிருப்பதாகவே கூறப்படுகிறது. இதனிடையே ட்ரோன் விமானங்கள் பாதுகாப்பு கருதி வான் எல்லையை வட்டமிட்டு ரோந்து பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஆனால், பிரித்தானியர்களை கண்டிப்பாக மிக விரைவில் வெளியேற்றுவோம் என பிரதமர் போரிஸ் ஜோன்சன் உறுதிபட தெரிவித்துள்ளார். இறுதி நொடி வரையில் மீட்பு நடவடிக்கை தொடரும் என்றே போரிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார்.
ஐ.எஸ் தீவிரவாதிகள் என அடையாளம் காணப்பட்ட இருவர் தாலிபான்களால் சிறைபிடிக்கப்பட்ட சில மணி நேரங்களில் இந்த கொலைவெறி தாக்குதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.