அமலாக்கத்துறையின் அடுத்த செக்! செந்தில் பாலாஜி சகோதரரின் மனைவிக்கு சம்மன்
தமிழக அமைச்சர் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமாரின் மனைவி நிர்மலா நேரில் ஆஜராகுமாறு அமலாக்கத்துறை அதிகாரிகள் சம்மன் ஒட்டியுள்ளனர்.
செந்தில் பாலாஜியிடம் விசாரணை
பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைதான செந்தில் பாலாஜியை 5 நாட்கள் அமலாக்கத்துறை அதிகாரிகள் காவலில் எடுத்து இன்று 3-வது நாளாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
செந்தில் பாலாஜி தொடர்பாக கைப்பற்றிய ஆவணங்களை வைத்து அமலாக்கத்துறை அதிகாரிகள் காலை 8 மணி முதல் கேள்விகளை முன்வைத்து விசாரணை நடத்தினர்.
ஒரு நாளைக்கு 50 கேள்விகள் வீதம் செந்தில் பாலாஜியிடம் விசாரணை செய்து, அவரது பதிலை பதிவு செய்ய முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
செந்தில் பாலாஜி சகோதரர் பங்களாவில் சோதனை
இதனிடையே இன்று, கரூர்-சேலம் பைபாஸ் சாலையில் செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமார் கட்டி வரும் பெரிய பங்களாவில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர் .
அங்கு, இரண்டு காரில் 8க்கும் மேற்பட்ட அமலாக்கத்துறை அதிகாரிகள் துணை ராணுவ படையுடன் வந்து சோதனை நடத்தினர்.
முன்னதாக, கடந்த மே மாதம் விலையுயர்ந்த மார்பிள் மற்றும் கிரானைட் கற்களை கொண்டு வீடு காட்டுவதாக வருமானத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
அமலாக்கத்துறை சம்மன்
இந்நிலையில், அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை முடித்த பிறகு செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமாரின் மனைவி நிர்மலா நேரில் ஆஜராகுமாறு சம்மன் ஒட்டினர்.
இதனிடையே, செந்தில் பாலாஜி சகோதரர் அசோக் குமார் நேரில் ஆஜராகுமாறு 4 முறை சம்மன் அனுப்பப்பட்டது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |