உக்ரைனில் வணிகவளாகம் ஒன்றில் கண்டெடுக்கப்பட்ட அப்பாவி மக்களின் சடலங்கள்
உக்ரைனின் மரியுபோல் நகரில் அமைந்துள்ள வணிக வளாகம் ஒன்றில் ரஷ்ய துருப்புகள் கொன்று தள்ளிய அப்பாவி மக்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
மரியுபோல் நகரில் ரஷ்ய துருப்புகள் அப்பாவி மக்களை கொன்று புதைத்துவிட்டு சென்றுள்ளதால், தற்போது மண் பாழானதாகவும், நிலத்தடி நீர் மாசடைந்துள்ளதாகவும், ஆறு மற்றும் கடலில் வெள்ளம் கலந்துள்ளதால் சிக்கல் ஏற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும், உக்ரைன் மக்களை கொன்ற ரஷ்ய துருப்புகள் சடலங்களை ஆற்றில் வீசியுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. மட்டுமின்றி, புதைக்கப்பட்ட சடலங்களை தோண்டி எடுத்து அருகாமையில் உள்ள வணிக வளாகத்தில் ரஷ்ய துருப்புகள் மறைவு செய்ததாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
மனித உடல்களை குப்பைகள் போல கைவிட்டு சென்றுள்ளதாக நகர மேயர் குறிப்பிட்டுள்ளார். உக்ரேனிய அதிகாரிகள் செவ்வாயன்று வெளியிட்ட தகவலில், இடிபாடுகளுக்குள் தோண்டியபோது மரியுபோலில் 200 க்கும் மேற்பட்ட உடல்களைக் கண்டுபிடித்ததாகக் கூறினர், மரியுபோல் நகரம் கடந்த சில மாதங்களில் ரஷ்ய படைகளின் மோசமான தாக்குதல்களை எதிர்கொண்டது என தெரிவித்துள்ளனர்.
போருக்கு முன்பு, மரியுபோல் நகரத்தில் சுமார் 500,000 மக்கள் குடியிருந்து வந்தனர். இங்குள்ள கடற்கரைகளால் புகழ்பெற்ற ஒரு காஸ்மோபாலிட்டன் நகரமாக மரியுபோல் இருந்தது. தற்போது இடிபாடுகளுக்கு நடுவே, சடலங்களுடன், மின்சாரம் துண்டிக்கப்பட்டு போதிய குடிநீர் இன்றி சுமார் 100,000 மக்கள் எஞ்சியுள்ளனர்.