சென்னை IIT பட்டமளிப்பு விழாவில் பாலஸ்தீன ஆதரவு குரல்.., அரங்கம் அதிர பேசிய மாணவர்
சென்னை ஐஐடி பட்டமளிப்பு விழாவில் தங்கப் பதக்கம் பெற்ற மாணவர் ஒருவர் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாக குரல் எழுப்பியுள்ளார்.
யார் அந்த மாணவர்?
சென்னை ஐஐடியின் 61 வது பட்டமளிப்பு விழா ஐ.ஐ.டி வளாகத்தில் நேற்று நடைபெற்றது. இந்த விழாவில் அமெரிக்காவின் உயிர்வேதிநுட்ப அறிவியலாளர் பிரயன் கே.கோபில்கா சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார்.
அப்போது மாணவர் தனஜெய் பாலகிருஷ்ணன் என்பவருக்கு தங்க பதக்கம் வழங்கப்பட்டது. இவர் பாலஸ்தீனம் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு எதிராக குரல் எழுப்பியுள்ளார்.
இந்த மாணவர் பேசுகையில், "பாலஸ்தீனத்தில் இனப்படுகொலை நடக்கிறது. இதற்கு ஆதரவாக பெரும் கார்ப்பரேட் நிறுவனங்கள் போரை நடத்தக் கூடிய நாடுகளுக்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் உதவி செய்கின்றன.
அங்கு அதிகமான எண்ணிக்கையில் மக்கள் இறக்கிறார்கள். இதற்கு வெளிப்படை முடிவு ஒன்றுமில்லை. நாம் ஏன் இதற்கு கவலை கொள்ள வேண்டும்?
தொழில்நுட்ப நிறுவனங்களில் உயர்மட்ட அளவில் வேலை வாங்குவதற்கு பொறியியல் மாணவர்களாகிய நாம் அதிகளவு உழைக்கிறோம். நல்ல சம்பளம் பெறுவதற்காக நாம் இதை செய்கிறோம்.
இந்த மாதிரியான தொழில்நுட்ப நிறுவனங்கள் பாலஸ்தீன போரில் சம்பந்தப்பட்டு இருக்கின்றன. மக்களை கொல்வதற்காக தொழில்நுட்பங்களைக் கொடுக்கின்றன.
இதனை தடுப்பதற்கு என்ன வழி என்று தெரியவில்லை. ஆனால், நாம் செய்யும் பணிகளின் விளைவுகள் தெரியும்.
ஸ்டெம் (STEM) பின்புலத்தில் இருந்து பெரு நிறுவனங்கள் செல்லும் நாம் சாதி, நம்பிக்கை, பாலினம் ஆகியவற்றால் பாதிக்கப்படும் மக்களுக்கு என்ன செய்ய முடியும் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்" என்றார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |