ஐக்கிய அமீரகம் உட்பட 4 நாடுகளுக்கான விமான சேவைகள் முடக்கம்: அறிவித்த சவுதி
கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய அரபு அமீரகம் உட்பட 4 நாடுகளுக்கான விமான சேவைகளை முடக்குவதாக சவுதி அரேபியா அறிவித்துள்ளது.
ஞாயிற்றுக்கிழமை முதல், ஐக்கிய அரபு அமீரகம், எத்தியோப்பியா, வியட்நாம் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கான விமான சேவைகள் நிறுத்தப்படும்,
மேலும் இந்த நாடுகளைச் சேர்ந்த குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் உட்பட அனைத்து வருகைகளும் கட்டாயத் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படும் என சவுதி அரேபியா உள்விவகார அமைச்சகம் அறிவித்துள்ளது.
மட்டுமின்றி இந்த நாடுகளுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ சவுதி அரேபிய மக்கள் பயணப்படுவதையும் தடை செய்துள்ளதுடன், தேவை இருப்பின் உரிய அதிகாரிகளை தொடர்பு கொண்டு அனுமதி பெறவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆனால், தற்போது இந்த குறிப்பிட்ட நாடுகளில் ஏதேனும் சவுதி அரேபியர்கள் சிக்கியிருந்தால் ஞாயிற்றுக்கிழமை இரவு 11 மணிக்கு முன்னர் நாடு திரும்பவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கடந்த மே 30 முதல் ஐக்கிய அரபு அமீரகம், ஜேர்மனி, அமெரிக்கா, அயர்லாந்து, இத்தாலி, போர்ச்சுகல், பிரித்தானியா, சுவீடன், சுவிட்சர்லாந்து, பிரான்ஸ் மற்றும் ஜப்பான் உள்ளிட்ட 11 நாடுகளில் இருந்து வரும் பயணிகள் சவுதி அரேபியாவுக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.