தாலிபான்களின் ஆட்சி... ஆப்கானிஸ்தானுக்கு நிதி உதவியை நிறுத்தியவர்களின் பட்டியல்
ஆப்கானிஸ்தான் தாலிபான்களின் கைகளில் மீண்டும் சிக்கியுள்ள நிலையில், அந்த நாட்டுக்கான பொருளாதார உதவிகளை பிரித்தானியா, ஜேர்மனி, உலக வங்கி ஆகியோர் நிறுத்தி வைத்துள்ளனர்.
ஆப்கானிஸ்தானை பொறுத்தமட்டில் அதன் பட்ஜெட்டில் 80% வெளிநாட்டு உதவிகளால் வருகிறது. ஆனால் தற்போது தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில், உலக வங்கியானது ஆப்கானிஸ்தானில் அனைத்து புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டங்களை இடைநிறுத்தியுள்ளது. ம
ட்டுமின்றி, இந்த மாதம் அளிக்கவிருந்த 440 மில்லியன் டொலர் நிதியை சர்வதேச நாணய நிதியம் தடுத்து நிறுத்தியுள்ளது. அமெரிக்காவில் உள்ள ஆப்கான் மத்திய வங்கியில் உள்ள சுமார் 7 பில்லியன் டொலர் தொகை முடக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனி இந்த ஆண்டு முன்னெடுக்கவிருந்த 300 மில்லியன் டொலர் திட்டத்தை நிறுத்தி வைத்துள்ளது. பின்லாந்து மற்றும் ஸ்வீடன் நாடுகளும் நலத்திட்ட உதவிகளை நிறுத்தியுள்ளது.
புனரமைப்பு நடவடிக்கைகளை நிறுத்தி வைத்துள்ள ஐரோப்பிய ஒன்றியம், ஆப்கானிஸ்தானில் மனிதாபிமான உதவியை அதிகரிக்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. பிரித்தானியா அறிவித்த 286 மில்லியன் பவுண்டுகள் உதவியை தாலிபான் ஆட்சி காலத்தில் இனி முன்னெடுக்குமா என்பது தொடர்பில் தெளிவான முடிவுகள் இன்னமும் அறிவிக்கப்படவில்லை.
மட்டுமின்றி, கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற ஒரு சர்வதேச நன்கொடையாளர் மாநாட்டில், அடுத்த நான்கு ஆண்டுகளில் மொத்தம் 12 பில்லியன் டொலர் தொகையானது ஆப்கானிஸ்தானுக்கு உறுதியளிக்கப்பட்டது.
ஆனால், தற்போதைய நெருக்கடியால் இந்த உறுதிமொழிகள் எவ்வாறு பாதிக்கப்படும் என்பது தெளிவாக இல்லை என்றே கூறப்படுகிறது.