டி20 உலகக் கோப்பை: அடிலெய்டு ஓவலில் புதிய சாதனை படைத்த கோஹ்லி!
சர்வதேச டி20 போட்டிகளில் 4000 ஓட்டங்கள் கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார் விராட் கோஹ்லி.
4000 ஓட்டங்கள் - புதிய மைல்கல்
இன்று அவுஸ்திரேலியாவின் அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடக்கும் 2022 டி20 உலகக் கோப்பையின் இரண்டாவது அரையிறுதியில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தின் போது விராட் கோஹ்லி, சர்வதேச டி20 போட்டிகளில் 4000 ஓட்டங்கள் கடந்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளார்.
இப்போட்டியில், 40 பந்துகளில் 50 ஓட்டங்கள் அடித்து விராட் கோஹ்லி, 4000 டி20 ஓட்டங்களை கடந்த முதல் துடுப்பாட்டக்காரர் என்ற சாதனையை படைத்தார்.
பவர்பிளேயில் கே.எல்.ராகுலை இந்தியா இழந்த பிறகு ஆரம்பத்தில் பேட் செய்ய வந்த கோஹ்லி, போட்டியின் நான்காவது அரை சதத்தை அடித்தார்.
கோஹ்லி 40 பந்துகளில் அரை சதத்தை முடித்த உடனேயே கிறிஸ் ஜோர்டானால் ஆட்டமிழந்தார்.
முன்னிலை வகிக்கிறார் கோஹ்லி
ஆடவர் T20I வரலாற்றில் அதிக ஓட்டங்களை பெற்ற துடுப்பாட்டக்காரருக்கான லீடர்போர்டில் தொடர்ந்து முன்னிலை வகிக்கிறார் கோஹ்லி.
அவர் இப்போது 115 T20I போட்டிகளில் 107 இன்னிங்ஸ்களில் 52.74 சராசரி மற்றும் 137.97 ஸ்ட்ரைக் ரேட்டில் 4008 ஓட்டங்கள் எடுத்துள்ளார். இதில் ஒரு சதம் மற்றும் 37 அரை சதங்கள் அடித்துள்ளார்.
முதல் ஐந்து டி20 ஓட்டங்களை எடுத்தவர்கள் பட்டியலில், கோஹ்லி முதலிடத்திலும், அவரைத் ஹோடர்ந்து இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா (3853 ஓட்டங்கள்), நியூசிலாந்தின் மார்ட்டின் கப்டில் (3531), பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் (3323), அயர்லாந்து வீரர் பால் ஸ்டிர்லிங் (3181) ஆகியோர் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
இந்தியா-இங்கிலாந்து அரையிறுதி
இப்போட்டியில் முதலில் துடுப்பாடிய இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பில் 168 ஓட்டங்கள் குவித்துள்ளது.
இந்தியாவைத் தொடர்ந்து இங்கிலாந்து அணி விளையாடிவருகிறது. இப்போட்டியில் வெற்றி பெறும் அணி நவம்பர் 13-ம் திகதி மெல்போர்னில் நடக்கும் இறுதி ஆட்டத்தில் பாகிஸ்தானை எதிர்கொள்ளும்.