பாதுகாப்பை வலுப்படுத்த அமெரிக்காவின் அழுத்தம்: ரூ 3 லட்சம் கோடிக்கு ஆயுதங்கள் வாங்கும் தைவான்
சீனாவுடனான நெருக்கடிகளுக்கு மத்தியில், வான் பாதுகாப்பு அமைப்பை உருவாக்குவது உட்பட ஆயுதங்கள் வாங்கும் பொருட்டு 40 பில்லியன் டொலர் ஒதுக்கியுள்ளதாக தைவான் ஜனாதிபதி Lai Ching-te அறிவித்துள்ளார்.
சீனாவின் அச்சுறுத்தல்
பாதுகாப்பை வலுப்படுத்த ஆயுதங்களுக்கு அதிகம் செலவிட வேண்டும் என அமெரிக்கா அளித்துவரும் அழுத்தங்களை அடுத்தே ஜனாதிபதி Lai Ching-te இந்த முடிவுக்கு வந்துள்ளார்.

குறித்த தொகையானது 2026 முதல் 2033 வரையிலான காலகட்டத்தில் அமெரிக்காவில் இருந்து ஆயுதங்கள் வாங்க செலவிடப்படும். ஏற்கனவே தீவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பாதுகாப்பு செலவினங்களை 5 சதவீதமாக உயர்த்துவதாக லாய் உறுதியளித்துள்ளார்.
தைவான் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்திற்கு சீனாவின் அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருவதாக தெரிவித்துள்ள ஜனாதிபதி லாய், சமீபத்தில், ஜப்பான், பிலிப்பைன்ஸ் மற்றும் தைவான் ஜலசந்தியைச் சுற்றியுள்ள பகுதிகளில் பல்வேறு வகையான இராணுவ ஊடுருவல்கள், தவறான தகவல் பரப்புரைகள் நிகழ்ந்து வருவது பிராந்தியத்தில் உள்ள அனைத்து தரப்பினருக்கும் ஆழ்ந்த அமைதியின்மையையும் துயரத்தையும் ஏற்படுத்துகிறது என்றார்.
முதல் தீவுச் சங்கிலியின் மிக முக்கியமான மற்றும் முதன்மையான பகுதியான தைவான், தமது உறுதியை வெளிப்படுத்த வேண்டும் மற்றும் தற்காப்பில் அதிக பொறுப்பை ஏற்க வேண்டும் என்றார்.
ஜப்பானின் கிழக்கு சீனக் கடலில் இருந்து பசிபிக் பெருங்கடலில் பிலிப்பைன்ஸ் வழியாக நீண்டு கிடக்கும் தீவுகளின் வரிசையைக் குறிப்பிட்டே லாய் பேசியுள்ளார்.

10 சதவீதமாக உயர்த்த
தைவான் தனது பாதுகாப்பு பட்ஜெட்டை 2026 ஆம் ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.3 சதவீதமாக உயர்த்தியுள்ளது. அதாவது 31.18 பில்லியன் அமெரிக்க டொலர் தொகையை முதற்கட்டமாக ஒதுக்கியுள்ளது.
மொத்தமாக 40 பில்லியன் அமெரிக்க டொலர் அதாவது ரூ 350,000 கோடி ஆயுதங்கள் வாங்க செலவிடப்படும். ஆனால் தைவானின் பாதுகாப்பு செலவினங்களை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 10 சதவீதமாக உயர்த்த வேண்டும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்.

இது அமெரிக்கா அல்லது அதன் நேச நாடுகள் எதுவும் பாதுகாப்புக்கு என ஒதுக்காத மிகப்பெரிய தொகை என்றே கூறுகின்றனர். புதன்கிழமை தைவானின் அறிவிப்பை வரவேற்றுள்ள அமெரிக்க வெளிவிவகாரத்துறை, பாதுகாப்புக்கு முக்கியமான ஆயுதங்களை வாங்க தைவானை ஆதரிப்பதாக கூறியுள்ளது.
இதனிடையே, தைவான் விவகாரத்தில் சீனாவை கோபப்படுத்த வேண்டாம் என ஜப்பான் பிரதமருக்கு ட்ரம்ப் அறிவுரை கூறியுள்ள நிலையில், ஜப்பானிய பிரதமர் சானே தகைச்சியின் கருத்து பெரும்பாலும் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மையை மையமாகக் கொண்டதாகத் தோன்றுவதாக லாய் கூறியுள்ளார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |