நாட்டின் தேசியக் கொடியை சுமப்பவர்கள் மீது தாக்குதல்: தாலிபான்களின் சுயரூபத்தைக் காட்டும் வீடியோக்கள்
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலைக் கைப்பற்றியதும், நாங்கள் 20 ஆண்டுகளுக்கு முன்பு இருந்தது போல் இல்லை, மாறிவிட்டோம் என்றார்கள் தாலிபான்கள்.
ஆனால், அவர்கள் கொஞ்சம் கூட மாறவில்லை என்பதை, வெளியாகும் செய்திகள் உலகுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டிக்கொண்டிருக்கின்றன.
பெண்களுக்கு சம உரிமை கொடுப்போம் என்றார்கள். ஊடகங்களில் பணியாற்றும் பெண்களை ஓட ஓட துரத்தியுள்ளார்கள்.
பழி வாங்கமாட்டோம் என்றார்கள். தலைமைக் காவலர் ஒருவர் கண்களும் கைகளும் கட்டப்பட்ட நிலையில் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.
Hazara என்ற இனத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் கொடூரமாக கொல்லப்பட்டுள்ளார்கள். அவர்களில் ஆறு பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்கள், மூன்று பேர் சித்திரவதை செய்யப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளார்கள். அவர்களில் ஒருவரின் கையிலுள்ள சதை சீவி எறியப்பட்டிருக்கிறது, அவரது ஸ்கார்ஃபைக் கொண்டே அவர் கழுத்து நெறித்துக் கொல்லப்பட்டுள்ளார்.
இந்நிலையில், கூடுதல் அராஜகமாக நாட்டின் தேசியக் கொடியை சுமந்து செல்பவர்களைத் தாக்கத் தொடங்கியுள்ளார்கள் தாலிபான்கள்.
தனது உடலில் ஆப்கானிஸ்தான் கொடியை சுற்றிக்கொண்டு சைக்கிளில் செல்லும் ஒருவரை தாலிபான்களில் ஒருவர் அறையும் காட்சியும், மற்றொருவரை துப்பாக்கியின் பின் பக்கத்தால் தாக்கும் காட்சியும் வெளியாகி தாலிபான்களின் சுயரூபத்தை வெளிக்காட்டி வருகின்றன.