தாலிபான்களின் அடுத்த அதிரடி! இனி இதற்கு தடை: வெளியான முக்கிய தகவல்
ஆப்கானிஸ்தானின் ஹெராட் மாகாணத்தில் இருக்கும் கல்லூரிகளில் ஆண் மற்றும் பெண்கள் இருவரும் சேர்ந்து படிப்பதற்கு தாலிபான்கள் தடை விதித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதில் இருந்து அங்கு ஒவ்வொரு நாளும் பல மாற்றங்கள் கொண்டு வருகின்றன.
இந்நிலையில், ஹெராட் மாகாணத்தில் அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில், கல்லூரிகளில் ஆண் மற்றும் பெண் இருபாலரும் சேர்ந்து படிப்பதற்கு தாலிபான்கள் அதிரடியாக தடை விதித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
பல்கலைக்கழக பேராசிரியர்கள், தனியார் நிறுவனங்களின் உரிமையாளர்கள் மற்றும் தலிபான் அதிகாரிகளுக்கிடையேயான சந்திப்பின் பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாலிபான்கள் முதன் முறையாக ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய பின்பு வெளியான முதல் தடை இது என்று கூறப்படுகிறது,
மேலும், இது குறித்து அங்கிருக்கும் ஊடகம் வெளியிட்டிருக்கும் செய்தியில், தாலிபான் பிரதிநிதியும் உயர் கல்வித் தலைவருமான முல்லா பரித் பல்கலைக்கழகப் பேராசிரியர்கள் மற்றும் தனியார் கல்வி நிறுவனங்களின் உரிமையாளர்களுடன் மூன்று மணி நேரம் நடத்திய ஆலோசனைக்கு பின்னர் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், நல்லொழுக்கமுள்ள பெண் விரிவுரையாளர்கள் பெண் மாணவர்களுக்கு மட்டுமே கற்பிக்க அனுமதிக்கப்படுவார்கள் ஆனால் ஆண்களுக்கு அல்ல என்று தெரிவித்துள்ளார்.
ஆண் மற்றும் பெண் என இருபாலர் சேர்ந்து படிப்பது என்பது முதாயத்தில் உள்ள அனைத்து தீமைகளுக்கும் வேர் என்றும் முல்லா பரித் கூறியுள்ளார்.
கடந்த 20 ஆண்டுகளாக ஆப்கானிஸ்தான் அரசு அனைத்து பல்கலைக்கழகங்கள் மற்றும் நிறுவனங்களில் இணை கல்வி மற்றும் பாலின அடிப்படையிலான தனி வகுப்புகளின் கலப்பு முறையை நடைமுறைப்படுத்தி இருந்தது.
ஹெராட் மாகாணத்தில் தனியார் , அரசு பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் 40,000 மாணவர்களும் 2,000 விரிவுரையாளர்களும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.