பயந்ததுபோலவே நடந்துவிட்டது... எட்டு மாத கர்ப்பிணியான பொலிஸ் அதிகாரிக்கு தாலிபான்களால் ஏற்பட்ட கதி
தாலிபான்கள் ஆப்கானிஸ்தானைக் கைப்பற்றியதும், பெண்களுக்கு சம உரிமை கொடுப்போம், முந்தைய அரசில் பணியாற்றியவர்களை பழிவாங்கமாட்டோம் என்றெல்லாம் வாக்குறுதிகள் அளித்தார்கள்.
ஆனால், அவர்கள் கொடுத்த வாக்குறுதிகள் எல்லாம் காற்றோடு போய்விட்டது போல் உள்ளது.
கடந்த மாதம், பொலிஸ் அகாடமியில் முதுகலைப் பட்டப்படிப்புடன் பட்டம் பெற்ற முதல் ஆப்கன் பெண்ணான Gulafroz Ebtekar என்ற பெண் பொலிஸ் அதிகாரி, ஆப்கானிஸ்தானிலிருந்து தப்ப முயலும்போது தாலிபான்களால் கடுமையாக தாக்கப்பட்டார். முந்தைய அரசில் பொலிசாராக பணியாற்றிய தங்களை தாலிபான்கள் எப்படியும் கொன்று விடுவார்கள் என்று கூறியுள்ள அவர், இப்போதும் உயிருக்கு பயந்து தலைமறைவாக ஓடிக்கொண்டே இருப்பதாக செய்தி ஒன்று வெளியானது நினைவிருக்கலாம்.
இந்நிலையில், அவர் பயந்தது போலவே ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது.
ஆம், வீடு வீடாகத் தேடித்தேடி முந்தைய அரசில் பணியாற்றியவர்களை கொலை செய்து வரும் தாலிபான்கள், கர்ப்பிணிப்பெண்ணான ஒரு பொலிஸ் அதிகாரியை சுட்டுக் கொன்றுள்ளார்கள்.
Banu Negar என்ற அந்த பெண் பொலிஸ் அதிகாரி, Firozkoh என்ற இடத்திலுள்ள அவரது வீட்டில் வைத்தே, கடந்த சனிக்கிழமை, ஆயுதம் தாங்கிய மூன்று பேரால் சுட்டுக்கொல்லப்பட்டார்.
உள்ளூர் சிறைச்சாலையில் பணியாற்றிய அவர் கொல்லப்படும்போது எட்டு மாத கர்ப்பிணியாக இருந்துள்ளார். Banuவின் கணவரையும் குழந்தைகளையும் கட்டிப்போட்ட அந்த மூவரும், அவர்கள் கண் முன்னாலேயே அவரை துடிக்கத் துடிக்க சுட்டுக்கொன்றுள்ளனர்.
ஆனால், அவரை தாலிபான்கள் கொல்லவில்லை என்றும், ஏதோ தனிப்பட்ட விரோதம் காரணமாக அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்றும் கூறியுள்ள தாலிபான்களின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் , தாங்கள் அந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.