முக்கிய சிறைச்சாலையை கைப்பற்றிய தீவிரவாதிகள்... குற்றவாளிகளை விடுவித்ததால் பதற்றம்
ஆப்கானிஸ்தானில் முக்கிய சிறைச்சாலையை கைப்பற்றிய தலிபான் தீவிரவாதிகள், அங்குள்ள கொடூர குற்றவாளிகள் அனைவரையும் விடுவித்துள்ளனர்.
கந்தகார் மத்திய சிறைச்சாலையையே தலிபான் தீவிரவாதிகள் புதன்கிழமை கைப்பற்றியதாக அந்த அமைப்பின் செய்தித்துறை அறிவித்துள்ளது. மட்டுமின்றி, ஆப்கானிஸ்தான் தேசிய ஊடகங்களும் குறித்த தகவலை உறுதி செய்துள்ளது.
கந்தகார் சிறைச்சாலையை தலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றுவது இது முதன்முறையல்ல. 2008, 2011 ஆண்டுகளிலும், தலிபான் தீவிரவாதிகள் கந்தகார் சிறைச்சாலையை கைப்பற்றியதுடன் குற்றவாளிகளையும் விடுவித்துள்ளனர்.
தொடர் தாக்குதலுக்கு பின்னரே முக்கிய சிறைச்சாலையை கைப்பற்றியுள்ளதாக தலிபான் தீவிரவாதிகள் வெளிப்படுத்தியுள்ளனர். மேலும், சிறை அதிகாரிகள் சரணடைந்ததாகவும், விடுவிக்கப்பட்ட குற்றவாளிகள் தங்களுக்கு நன்றி தெரிவித்துள்ளதாகவும் தலிபான் தீவிரவாதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
சிறைச்சாலையில் உள்ள முக்கிய சில குற்றவாளிகலை விடுவிக்க கோரி கடந்த மாதம் தலிபான் தீவிரவாதிகள் கந்தகார் சிறைச்சாலைக்கு சென்றிருந்தனர். 3,000 தீவிரவாதிகள் கந்தகார் சிறைச்சாலையில் தண்டனை அனுபவிப்பதாக ஆப்கானிஸ்தான் அரசாங்கம் முன்னர் தெரிவித்திருந்தது.
சமீப நாட்களில் தலிபான் தீவிரவாதிகள் முன்னெடுத்துவரும் தொடர் தாக்குதல் நடவடிக்கையால் ஆப்கானிஸ்தானின் 65% பகுதியும் தற்போது தலிபான் கைவசம் வந்துள்ளது. இத்தகவலை ஐரோப்பிய ஒன்றிய அதிகாரி ஒருவர் உறுதி செய்துள்ளார்.
இதுவரை 6கும் மேற்பட்ட மாகாண தலைநகரங்களை தலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றியுள்ளனர்.
இதே நிலை நீடிக்கும் என்றால் அடுத்த சில வாரங்களில் ஆப்கான் தலைநகர் காபூல் தீவிரவாதிகளின் கைக்குள் சென்றுவிடும் அபாயம் இருப்பதாக உலக நாடுகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.